பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

செந்தமிழ் பெட்டகம்

பகவதிக்கு ஒற்றை முலைச்சி என்ற பெயர் இன்றும் வழங்குதலும், கண்ணகி மந்து என்ற பெயருள்ள ஊர் நீலகிரி மலையில் இருத்தலும், தமிழ்நாட்டுப் பெண்களிடையே நீராடல், தலைமயிர் விரித்தல் முதலியன பற்றிக் காணப்படும் பழக்க வழக்கங்களும்; நம்பிக்கைகளும் கண்ணகியின் கதை தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சி பற்றியதே என்பதையும், இக்காவியம் நாட்டில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கற்பனையே என்பதையும் தெளிவாக்குகின்றன

இந்நூல், வேந்தர் வரலாற்றுக்குத் துணைசெய்யினும் செய்யமாற் போயினும், நாட்டு வரலாற்றுக்குத் துணை செய்யும் சான்றுகள் பொதிந்தது என்பதில் ஐயம் இல்லை ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரச குடும்பத்தின் வரலாறு மட்டும் அன்று; அக்குடும்பத்தினர் இருவர் மூவரின் வெற்றி தோல்விகளைப் பற்றிய குறிப்புக்களைக் கொண்ட ஏடு மட்டும் அன்று நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைகள், பழக்க வழககங்கள், நம்பிக்கைகள், கலைவளர்ச்சி, சமயநிலை முதலான பலவற்றையும் அறிவிக்கும் நூலே உண்மை யான வரலாற்று நூல் ஆகும் இவ்வாறு கொள் வோர்க்குச் சிலப்பதிகாரம் இலக்கியச் சுவை மிகுந்த பெருங்காவியம் ஆவதோடு, வரலாற்றுக் குறிப்புகள் செறிந்த அரிய நூலாகவும் திகழ்கிறது

தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்த தெய்வ வழிபாடுகள், சமய நிலைகள் முதலிய பலவும் காய்தல் உவத்தலின்றி இந்நூலில் பொறிக்கப்பட்டுள்ளன மக்களின் ஆடையணிகள் பற்றியும், விழாக்கள் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. கொடு கொட்டி, பாண்டுரங்கம், துடிக் கூத்து, கூடைக் கூத்து, அவிநயக் கூத்து முதலிய கூத்து வகைகள் கூறப்பட்டுள்ளன குரவை, அம்மானை, பந்து முதலிய ஆடல்களும் கூறப்பட்டுள்ளன. இவை பற்றிய இசைப்பாட்டுக்களும் உள்ளன. கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஊசல்வரி முதலாய இசைப் பாட்டுக்களும்