பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

249

பின்னாளில் உலா, மடல், தூது, கோவை முதலிய பிரபந்தங்களைப் பாடிய புலவர்களும், தங்களுக்குச் சிந்தாமணியிடமுள்ள மதிப்பைத் தெரிவிக்க இந்நூலில் பயின்று வரும் செய்திகளைத் தக்க இடங்களில் அமைத்துப் பாராட்டியுள்ளார்கள்

சமணப்பெருமக்கள், இதனை மணநூல் என்றும், ‘முத்தி நூல்’ என்றும் போற்றிப் பூசையில் வைத்து வணங்கியும் ஓதியும் வரும் வழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் பல இடங்களில் இருந்து வருகிறது

12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கசோழன் என்னும் அனபாய சோழன், சிந்தாமணியைத் தன் அவைப் புலவரைக்கொண்டு விளக்கச் செய்து, கேட்டுக் களித்து வந்தான் என்றும், அதைக் கண்ட சேக்கிழார் அதைக் கேட்டுக் களிப்பதை விடுத்துச் சிவ கதைகளைக் கேட்டு நலனெய்துமாறு அவனுக்கு அறிவுறுத்தினார் என்றும், அது காரணமாகவே திருத்தொண்டர்புராணமாகிய பெரியபுராணம் சேக்கிழாரால் பாடப்பட்டது என்றும் திருத்தொண்டர் புராண வரலாறு கூறுகிறது

இந்நூல் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவ தத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சரமஞ்சரியார் இலம்பகம், மணமகள் இலம்பகம், பூமகள் இலம்பகம், இலக் கணையார் இலம்பகம்,முத்தி இலம்பகம் என்னும் பதின் மூன்று பகுதிகளை உடையது

கோவிந்தையாரொழிந்த காந்தருவ தத்தையார் முதலிய எட்டு மகளிரைக் கதாநாயகனாக சீவகன் மணப்பதே இந்நூல் நுவலும் செய்தியிற் பெரும்பகுதியாக அமைந்ததனால், இந்நூலுக்கு ‘மணநூல் என்னும் பெயர் வழங்குவதாயிற்று