பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

251

அதன் லநகர் அந்நாட்டரசன் சச்சந்தன் என்பவன் விதை தேசத்தரசன் அவன் மாமன், ஸ்ரீதத்தன் என்பது அவன் பெயர் அவன் மகள் விசயை அழகிலும் அறிவிலும் பிற குணநலங்களிலும் சிறந்து விளங்கினாள் சச்சந்தன் அவளை மணந்தான்; அவள் அழகில் ஈடுபட்டு அந்தப்புரத்தை விட்டு அகலானாகித் தனது ஆட்சிப் பொறுப்பை வஞ்சகனான கட்டியங்காரன் என்னும் மந்திரியினிடம் ஒப்படைத்தான்

விசயை கருவுற்றாள் ஓர் இரவு அவள் கண்ட மூன்று கனாக்கள் அவள் வாழ்க்கையில் அடுத்து நிகழும் நிகழ்ச்சிகளை விளக்குவனவாயிருந்தன அவள் தான் கண்ட கனாக்களைச் சச்சந்தனிடம் கூற, அவன் அவை குறிக்கும் தீங்குகளை மறைத்து, நலங்களை நவின்று நங்கையைத் தேற்றினான்

கட்டியங்காரன் அரசனைக் கொன்று ஆட்சியுரிமையைத் தனக்கே ஆக்கிக்கொள்ளக் கருதிப் படையுடன் அந்தப்புரத்தை முற்றுகையிட்டான் அதனை யறிந்த சச்சந்தன், கருவுற்றிருந்த விசயையைக் காப்பாற்றக் கருதி, அவளை ஒரு மயிற்பொறியிலேற்றி, ஆகாய வழியே அயலிடஞ்செல்ல விடுத்தான் கட்டியங்காரன் அரசனைக்கொன்று நாட்டுக்கு அதிபதியாயினன்

விசயையைத் தாங்கிச் சென்ற மயிற்பொறி அந்நகரைச் சார்ந்த ஒரு சுடுகாட்டில் இறங்கியது விசயை உடனே கருவுயிர்த்தாள், பிறந்த மைந்தனைக் கண்டு பலவாறு வருந்தினாள் அச்சுடுகாட்டிலிருந்த தெய்வம் விசயையின் தோழி வடிவில் வந்து அவளைத் தேற்றி, அவள் அணிந்திருந்த சச்சந்தன் பெயர் பொறித்த மோதிரத்தைக் கழற்றி மகவுக்கணிந்து, “அம்மணி, வருந்தற்க, நாம் மறைந்திருப்போம் இம்மகவை ஒருவன் வந்து எடுத்துச் செல்வன் அதனால், இது நன்கு வளர்ந்து நலம் பல பெறும்” என்று கூறி அவளுடன் ஓரிடத்தே மறைந்திருந்தது