பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

255

முயல, அது கண்ட சீவகன் உடனே அதனை அடக்கி அவளைக் காப்பாற்றினான் அது காரணமாகக் குணமாலை அவனைக் காதலித்தாள் சீவகன் அவளை மணந்தான்

அசனிவேகத்தின் சோர்வைக் கண்ட கட்டியங்காரன் சினந்து, அச்சோர்விற்குக் காரணனான சீவகனைக் கொணரும்படி வீரரை ஏவினான் வீரர் சீவகனைச் சூழ்ந்தனர் சீவகன், ஒராண்டு வரையில் கட்டியங் காரனை எதிர்ப்பதில்லை எனத் தன் ஆசிரியருக்கு வாக்களித்திருந்ததால், வந்த வீரரை எதிர்க்காமல், சுதஞ்சணனை நினைத்தான் உடனே சுதஞ்சணன் தோன்றி, அனைவரையும் மயக்கிச் சீவகனை எடுத்துச் சென்று தன் நகரில் இருந்தினன்.

வந்த வீரர்கள் அங்கே வந்த ஒருவனை உருத் தெரியாதபடி கொன்று, கட்டியங்காரனிடம் சென்று, சீவகனைக் கொன்று வீழ்த்தியதாகப் பொய் கூறினார்கள் கட்டியங்காரன் அது கேட்டு மகிழ்ந்தான்.

சுதஞ்சணன் சீவகனுக்கு மூன்று மந்திரங்களை உபபேசித்தான் அவற்றுள் ஒன்று, இனிய குரலை அளிக்க வல்லது; பிறிதொன்று, விடத்தைப் போக்க வல்லது; மற்றொன்று, வேண்டும் உருவை நல்குவது பின்னர்ச் சீவகன் பூவுலகையடைந்து காட்டில் எதிர்ப் பட்ட வேடனுக்குக் கொலைத்தொழிலை விட் டொழிக்க உபதேசித்தான்; காட்டில் தீயிலகப்பட்டு வருந்திய யானைகளைக் காப்பாற்றினான்; சந்திராப நகரையடைந்து, அந்நகர் மன்னன் மகனுடன் நட்புக் கொண்டான் அம்மன்னன் மகளான பதுமை என்பவள், பூக்கொய்கையில் பாம்பு தீண்டினமையால், விடந்தலைக்கேறி மயங்கினள் சீவகன், விடத்தைப் போக்கி அவளை மணந்து, சிறிது காலம் அவளுடன் இன்புற்றிருந்து, வேறிடஞ் செல்ல விரும்பி, ஒருவருமறியாவண்ணம் உருமாறிப் புறப்பட்டான்.