பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

257

மிடமடைந்து, நிகழ்ந்தன யாவும் அறிந்து, அவனுடன் அந்நகரில் தங்கியிருந்தான்

சீவகனுடைய மற்றத் தோழர்களும் அவனைக் காணக்கருதி, காந்தருவதத்தையால் அவன் இருக்குமிடமறிந்து, அவனைக் காணப்புறப்பட்டார்கள், வழியில் விசயை நோற்றிருந்த தவப்பள்ளியை அடைந்தார்கள்; தங்கள் வரலாற்றை வினவிய விசயைக்கு அதனை விளக்குகையில், சீவகன் செய்திகளையும் விளக்கினார்கள் அது கேட்ட விசயை, சீவகன் தன் மகனே என்பதை அவர்களுக்கு விளக்கி, அவனைத் தன்னிடம் அழைத்து வர வேண்டினள் தோழர்கள் அங்ஙனமே செய்வதாகக் கூறி விடை பெற்று, ஏமமாபுரத்தை அடைந்து, அரசன் ஆனிரையை மடக்கினர் அவர்களை எதிர்க்கச் சீவகனும் நந்தட்டனும் பிறரும் போர்க்கோலம் பூண்டு வந்தனர் சீவகன் தன் தோழர்களைக் கண்டு மகிழ்ந்து, நிகழ்ந்தனயாவுமறிந்து, தன் தாயின் இருப்பைத் தெரிந்து, அவளைக் காணும் பெருவிருப்புடன் அரசனிடம் யாவும் கூறி விடை பெற்றுத் தோழருடன் சென்று தாயைக் கண்டான்

அன்னையும் தன் மகனைக் கண்டு, அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, “மகனே, நீ உன் மாமனாகிய கோவிந்தன் உதவியால் உன் பகைவனை வெல்வாயாக!” எனக் கூறி வாழ்த்தினள் அவன் அதற்கு உடன்பட்டுத் தவமகளிர் சிலருடன் விசயையைத் தன் மாமன் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டுத் தன் தோழருடன் இராசமா புரத்தை அடைந்து, தோழரை ஒரு சோலையில் இருக்கச் செய்து, மன்மதனுங் கண்டு நாணத் தக்க வடிவுடன் நகர வீதியிற் செல்கையில், அங்குப் பந்தாடிக் கொண்டிருந்த விமலை என்பவள், சீவகன் முன்னே வீழ்ந்த தன் பந்தை எடுக்க வந்து, சீவகனைக் கண்டு காதலித்தாள் அவனும் அவள் அழகில் ஈடுபட்டு, மயங்கி, அவள் தந்தையாகிய சாகரதத்தனுக்குரிய கடையை அடைந்தான்

செ பெ- 17