பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

259

ஒளிந்திருந்த புத்திசேனன், “நீ அவனை அடைந்தாய்” என, அவள் வரம் பெற்றதாக மகிழ்ந்து, அந்தணனிருந்த இடத்தை அடைந்தாள், சீவகன் உண்மையுருக் கொண்டு நிற்கக் கண்டு திகைத்தாள் சீவகன் அவளை அன்புடன் தழுவி, அடுத்த நாள் மணம் புரிந்து கொண்டாள்

பின்னர்ச் சீவகன் விதைய நாட்டரசனும் தன் மாமனுமாகிய கோவிந்தராசனை அடைந்து, மேல் நடைபெற வேண்டுவனவற்றைப் பற்றி ஆலோசித்தான் அப்பொழுது கட்டியங்காரன் இராசமாபுரத்துக்கு வருமாறு தனக்கு எழுதிய கடிதத்தைப் பெற்ற கோவிந்தராசன், தன் அரசினைத் தன் மகனுக்களித்துப் பரிவாரம் சூழச் சீவகனுடன் இராசமாபுரத்திற்கு அண்மையில் வந்திறங்கித் தான் அமைத்துள்ள யந்திரத் திரிபன்றியை எய்து வீழ்த்துபவனைத் தன் மகள் இலக்கணை மணப்பாள் எனப் பலர்க்கும் செய்தி போக்கினன் செய்தியறிந்த கட்டியங்காரனும் மற்றவரும் வந்து, திரிபன்றி எய்யுந்திறனின்றித் தோல்வியுற்று நின்றனர் சீவகன் வெளிப்பட்டு அத் திரிபன்றினை எய்து வீழ்த்தினன் தான் இறந்தான் என்றெண்ணியிருந்த சீவகனைக் கண்ட கட்டியங்காரன், திடுக்கிட்டு, வெகுண்டு, தன் புதல்வரோடும் சைனியத்தோடும் அவனை எதிர்த்தான் சீவகன் துணைவரோடும் துணைப் படையோடும் கட்டியங்காரனை எதிர்த்துப் போரிட்டு அவனையும் அவன் மக்களையும் கொன்று, அனைவர்க்கும் மகிழ்வையுண்டாக்கித் தன் நாட்டுக்குரியவனாயினன்; இலக்கணையையும் மணந்தான்.

பின்னர்ச் சீவகன்தன் வாழ்விற்கு வழி கோலிய கந்துக்கடன் முதலியவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற சிறப்புக்களைச் செய்துமகிழ்ந்தான். சுதஞ்சணன் படிவத்தைப் பொன்னாற் செய்வித்துக் கோவிலில் அமைத்துச் சிறப்பித்தான் பின்னும் பல நற்காரியங்களைச் செய்து முடித்து, உலகஞ் செழிக்கச் செங்கோலோச்சினான்