பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கொங்குவேளின்
பெருங்கதை


பெருங்கதை என்பது உதயணன் என்னும் அரசனது கதையைக் கூறும் காப்பியம் உதயணன் குரு மரபிற் பிறந்தவன்; வத்த நாட்டில் உள்ள கெளசாம்பி என்னும் நகரத்தரசனாகிய சதானிகனுக்கு மிருகாபதி என்பவளிடம் பிறந்தவன் சதானிகன் என்பவன் பாண்டவர் காலத்துக்குப் பிறகு அரசாண்டு வந்தான். அவனுடைய பேரனின் மகனாகிய நிசக்குனு என்பவன் காலத்தில் அத்தினாபுரம் அழிந்து போயிற்று. எனவே, அவன் கெளசாம்பி நகரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டான். அவனுக்கு 16ஆம் தலைமுறையில் சதானிகன் என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் மகனே இக்கதைத் தலைவனாகிய உதயணன் ஆவான் இக்கதையை விஷ்ணு புராணம் கூறுகிறது. சூரியன் உதிக்குங் காலத்தில் பிறந்தவனாதலால் உதயணன் எனப்பட்டான்.

கெளசாம்பி நகரில் சதானிகனின் மனைவி மிருகாபதி, கருவுற்ற பத்தாந் திங்களில் ஒரு நாள் செவ்வுடை உடுத்து நிலாமுற்றத்தில் படுத்திருந்தாள். அவளைத் தசைப் பிண்டமெனக் கருதிய சிம்புட் பறவை ஒன்று விபுலம் என்னும் மலைக்குத் தூக்கிச் சென்று, உண்மையுணர்ந்து விடுத்துப் பறந்து போய் விட்டது அங்குச் சூரியோதய காலத்தில் மிருகாபதி வயிற்றில்