பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

செந்தமிழ் பெட்டகம்

காக்கின்ற தொழிலைச் செய்கின்ற காரணத்தால், திருமாலைக் காப்புப் பருவத்து முதற் கடவுளாகக் கொள்ள வேண்டுமென்ற வரையறை இருந்தும், பாட்டுடைத் தலைவர்களின் தொடர்புக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முறையை மாற்றிப் பாடினர் தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடுகளான-இயற்றியோர் யாரெனத் தெரியாத நூல்களான-சிவயோக நாயகி பிள்ளைத் தமிழிலும் முறையே ஐந்தாவது பாடலிலும் எட்டாவது பாடலிலும் திருமாலைக் காப்புப் பருவத்தமைத்துப் பாடினர்

காப்புப் பருவம் அமைக்கின்ற முறையிலே, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமது நூலான சேக்கிழார் பிள்ளைத் தமிழிலே பெரு மாறுதலைச் செய்துள்ளார் காப்பிற்குரியவராகக் கூறப்பட்ட தெய்வங்களையெல்லாம் விடுத்துத் திருத்தொண்டர் களையெல்லாம் காப்பில் வைத்துப் பாடியுள்ளார் காப்புப் பருவமென்பதைத் தெய்வ வணக்கமெனக் கூறியும், பன்னிரு ஆழ்வார்களைக் காவற் கடவுளாகக் கூறியும் அமைகிறது வைகுந்த நாதன் பிள்ளைத்தமிழ் சத்தியஞான பண்டாரம் பிள்ளைத் தமிழிலே ஐந்தெழுத்தும், திருவெண்ணிரும் காப்புப் பருவத்திலே வைத்துப் பாடப்பட்டுள்ளது

காப்புப் பருவத்தில் கூறப்படும் கடவுளராகிய விரிசடைக் கடவுளையும், எழுவர் மங்கையரையும் செய்யுளில் கூறுமிடத்து, அவர்தம் கொலையகற்றியும், இயற்றிய கொடுமையகற்றியும் மங்கலமாகப் பாடவேண்டுமென்பதைப் பன்னிரு . பாட்டியலும் நவநீதப் பாட்டியலும் வற்புறுத்துகின்றன

இரண்டாவது செங்கீரைப் பருவம் இது ஐந்தாம் மாதத்து நிகழ்வது கூறுவது 'கீர்’ என்பதற்குச் 'சொல்’ எனப் பொருள்கொண்டு, தொடையமைதிகள் இல்லாத ஒன்றைச் செந்தொடை எனக் கூறுவதுபோலச் சொல்லுக்குரிய அமைதியில்லாததைச் செங்கீரென்றார்