உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

செந்தமிழ் பெட்டகம்

நிகண்டுகளில் புகுந்த புதுச்சொற்கள் மிக மிகக் குறைவு வடசொற்கள்தாம் இவற்றில் அளவின்றிப் பெருகியுள்ளன. தமிழில் நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் புகுந்து, தமிழ்மயமாய் மாறிவிட்ட வடசொற்களை நிகண்டுகள் மேற்கொள்ளுதல் மிகவும் பொருத்தமே ஆனால், இருவகை வழக்கிலும் இல்லாத வடசொற்களும், வடமொழியில்கூட மிக அருகி வழங்கும் சொற்களும், பிற்கால நிகண்டுகளில் காணப்படுகின்றன இவ்வகை வடசொற்கள் வழக்கினுள் பயின்று வருதல் இயலாத காரியம் கால அடைவில் சொற்பொருள் சிலவற்றில் குறைந்தும், வேறு சிறவற்றில் பலவாறாகப் பெருகியும் ஆட்சியில் அமைந்துள்ளன. வடமொழிச் சொற்களின் உச்சாரண பேதத்தை ஒழித்துத் தமிழில் ஒரு வடிவிற்றாகக் கொள்ளுதலிலும் பல பொருள்கள் ஏற்பட்டுள்ளன நிகண்டு ஆசிரியர்கள் இருவகை வழக்குகளையும் அறிந்து நூல் இயற்றுதலில் சிற்சில இடங்களில் பிழைபட்டும் உள்ளனர். இதனால் நிகண்டுகளில் பல சொல் வழுக்களும் பொருள் வழுக்களும் புகுந்துள்ளன. இவையெல்லாம் துணித்து நோக்கி உணரத்தக்கனவாகும்.

தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் நிகண்டுகள் சிறந்ததோர் இடத்தைப் பெற்றுள்ளன திவாகரம், பிங்கலம் முதலிய பழைய நிகண்டுகள் நல்ல முறையிற் பரிசோதித்து இன்னும் பதிப்பிக்கப் பெறவில்லை அச்சேறாது உள்ள நிகண்டுகளும் உள்ளன. இந்நிகண்டு களை யெல்லாம் நல்ல முறையில் பதிப்பித்தல் தமிழ் அகராதியைச் செம்மையுற இயற்றுதற்குப் பெரிதும் உதவும் ‘தமிழ்-அகராதியின் ஆதார நூற்றெகுதி’ என்னும் வரிசையில், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் நாமதீப நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றை நல்ல முறையில் பதிப்பித்துள்ளார் கைலாச நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவைகளைச் சிற்சில பத்திரிகைகளில் சிறிது சிறிது வெளியிடத்-