பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

45

பேச்சு என்பது, வாக்கியம் வாக்கியமாகத் தொடர்ந்து ஓடும் ஒரு பேராறு கருத்தை முழு முழு வாக்கியமாகவே விளக்குகிறோம்; வாக்கியமே கருத்தின் முழு நிலையளவுகோல் அல்லது தனியன் வாக்கியத்தில் வரும் சொற்கள் அதன் உறுப்போ அன்றித் தனியே வழங்கும் தனிநிலை பெற்றன அல்ல ஆனால், அகராதியில் எண்ணக்கிடக்கும் இந்தச் சொற்கள் எண்ணிறந்த கருத்துகளை உணர்த்துவது எப்படி? அவை ஒன்றோடொன்று எண்ணிறந்த பலவகையில் சேர்ந்து, இவ்வாறு எண்ணிறந்த கருத்துகளை விளக்குகின்றன ஒன்றிற்கொன்றுள்ள பலவகை இயைபு, இந்த இயைபுகளின் பலவகை வெளிப்பாடு என்ற இவற்றின் காரணமாக வாக்கியம் பலவகையாக மாறுபடும் இது மொழிகளில் பலகையாக வரக் காண்கிறோம்

ஒரு வாக்கியத்தை ஒரு சொல்போல வழங்குகிற மொழிகளும் உண்டு. அமெரிக்கச் செவ்விந்தியர் பேசும் மொழிகள் இத்தகைய பலவின் ஒற்றுமை நயம் பெறு மொழிகளாம் இங்கே ஒரே தொகையாக வாக்கியம் விளங்குகிறது எனலாம். ஆனால், இங்கே பல சொற்கள் என்ற பேச்சில்லை வினை என்பதே இல்லாதபோது பொது வினைச்சொற்கள் என்று இங்குப் பேச இடம் ஏது? ஆப்பிரிக்காவில் வழங்கும் தொகைநயம் பெறு மொழிகள் என்பவை இவற்றின் வளர்ச்சிபோலத் தோன்றும். செயப்படுபொருளை வினையினின்று பிரிக்காமல் இரண்டும் சேர்ந்த தொகையாகவே இவை வழங்குகின்றன பலவகைக் கருத்துகள் சொல்லில் தொடர்ந்து திணிக்கப்பட்டவை போல விளங்கும் தனிமை நயம் பெறு மொழிகள் இவற்றிற்கு முழுதும் முரணானவை; ஒவ்வொரு கருத்தின் பாகுபாட்டினையும் ஒவ்வொரு சொல்லாகத் தனித்தனி பிரித்து இவை அமைக்கின்றன.