பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

செந்தமிழ் பெட்டகம்

சீனம் முதலியன இத்தகையன சொல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள இலக்கண இயைபானது இங்கே வாக்கியத்தில் சொற்கள் நிற்கும் இடத்தினைப் பொறுத்ததாகும் இந்தச் சொற்கள் தனித்தனி நில்லாது ஒட்டிக்கொண்டவைபோல வருவது ஒட்டு மொழிகளின் இயல்பாகும் திராவிட மொழிகள் இத்தகையன என்பர் போகின்றான் என்பதில் “போ” என்ற வினைச்சொல்லும், “கின்று” என்ற நிகழ்காலச் சொல்லும் “ஆன்” என்ற ஆண்பாற் சொல்லும் ஒட்டி இருக்கின்றன என்பர்

ஒரு காலத்தில் பொருளுடையவாய் இருந்து, பின் பொருளற்றத் தேய்ந்துபோன இடைச் சொற்கள், அடிச்சொற்களின் பின்னோ முன்னோ சேர்ந்து இலக்கண இயைபினை இந்த மொழிகளில் விளக்கிவரும் தேய்ந்த சொற்கள் என்றே தோன்றாதபடி உருபுகள் எழுத்துக்களாய் ஒழியும் போது இவையே உருபு மொழிகள் என வளர்கின்றன (தமிழில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபினைக் காண்க) இந்திய ஐரோப்பிய மொழிகள் இத்தகையவை உயிர் ஒலி மாறுதலாலோ விகுதிருபு மாறுதாலோ சொல்முதல் மாறுவதாலோ இலக்கண இயைபு விளங்கலாம் நாளடைவில் ஒவ்வொரு கருத்தையும் தனித்தனிச் சொல்லாக வேறு பிரித்து வழங்கும் ஒற்றுமை நயம் பெறு மொழிகளாக இவை வளர்கின்றன

இந்திய ஐரோப்பிய மொழியில் ஆங்கில மொழியின் வளர்ச்சி இதனை விளக்குகிறது இவ்வாறு மொழிகள் பலவகையாக வாக்கிய அமைப்பின் அடிப்படையில் வெவ்வேறே ஆனாலும், அவை வளர்ச்சியின் பயனாய் வரையறையின்றிப் பலவகை நிலையிலும் பின்னிக்கொண்டு கிடக்கக் காண்கிறோம் இருந்தாலும் இவற்றின் இலக்கண முறை வெவ்வேறே ஆம் இலக்கண ஒற்றுமை உள்ள மொழிகளை ஓர் இனம் எனக் கொள்ளலாம் பிறவகையான ஒற்றுமைகள் போலி ஒற்றுமைகள் என முன்னர்க் கண்டோம்