பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

செந்தமிழ் பெட்டகம்

முதலிய வழக்குக் காரணமாக ஒரு சொல்லுக்கு உரிய இடத்தில் வேறு சொல் புக, அதனால் அந்தச் சொல்லின் பொருள் மாறுதல், (7) அறியாமை, தெளிவின்மை ஆகிய காரணங்களால் ஒரு சொல்லைத் தவறான பொருளில் வழங்க, நாளடைவில் அந்தத் தவறு மொழியில் இடம் பெறுதல், (8) மக்களின் கருத்துகளில் புதியன தோன்றுவதாலும் கருவிகளில் புதியன பரவுவதாலும் அவற்றைக் குறிக்கப் புதிய பல சொற்கள் ஏற்படுவதால், இருந்த பழைய சொற்களின் பொருள்களில் மாறுதல் ஏற்படல்

இவ்வாறு பல காரணங்களால் சொல்லின் பொருள் மாறுதல் அடையும்போது இழிந்த பொருளைக் குறித்து வந்த சொல் உயர்ந்த பொருளைக் குறிக்க வழங்குவதும் உண்டு, உயர்ந்ததைக் குறித்துவந்த சொல் இழிந்ததை உணர்த்துவதும் உண்டு தமிழில் ‘களிப்பு’, ‘மகிழ்ச்சி’ என்னும் சொற்கள் பழங்காலத்தில் தேன், கள் முதலியவை குடித்து மயங்கிய நிலையை உணர்த்தியவை அவை இன்று மனம் மகிழ்ந்திருத்தலாகிய உயர்ந்த பொருளை உணர்த்துகின்றன மணம் என்னும் பொதுவான பொருள் குறித்துவந்த 'நாற்றம்’ என்ற சொல், இக்காலத்தில் கெட்ட மணத்தையே உணர்த்துகிறது, இவற்றை முறையே உயர்பொருட்பேறு, இழிபொருட் பேறு என்பார்கள்

பலவற்றிற்குப் பொதுப்பெயராக இருந்த சொல் அவற்றுள் ஒன்றைமட்டும் சிறப்பாகக் குறிப்பதும் உண்டு; சிறப்பாக ஒரு பொருளைக் குறித்த சொல், பலவற்றிற்கும் பொதுவாக வழங்குதலும் உண்டு ‘பொன்’, ‘நெய் முதலிய சொற்கள் பொதுவாக இருந்து சிறப்புப்பொருள் உணர்த்தத் தொடங்கியவை குட்டி என்னும் சொல் சில விலங்குகளின் இளமைப்பெயராக இருந்ததுபோய், இன்று பல விலங்குகளின் இளமைக்கும் பொதுப்பெயராக வழங்குகிறது. இவை முறையே சிறப்புப் பொருட்பேறு, பொதுப்பொருட்பேறு எனப்படும்