பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

91

முதலில் பருப்பொருளை உணர்த்திவந்த சொல் நாளடைவில் மாறி, நுண்பொருளைக் குறிப்பதும் உண்டு; நுண்பொருளை உணர்த்திவந்த சொல் மாறிப் பருப்பொருளை உணர்த்துவதும் உண்டு ‘சூழ்ச்சி’ என்பது முதலில் உடலால் சூழ்ந்து நிற்றலை உணர்த்தியதாக இருந்து, இன்று கருத்துவகையால் வளைத்தலை உணர்த்துகின்றது ‘விருந்து’ என்பது முதலில் புதுமைப் பண்பைப் குறித்துவந்து, பிற்காலத்தில் புதியவராக வரும் மனிதரைக் குறிக்க வழங்கலாயிற்று இவை முறையே நுண்பொருட்பேறு, பருப்பொருட்பேறு எனப்படும்

சுவையியல் :

சுவையில் இயல்பினையும், அஃது உண்டாகும் முறையினையும், அதன் வகைகளையும் இங்கு நோக்குவோம் மக்கள் உள்ளத்தில் ஒவ்வொரு கால் எழும் உளவேறுபாடு பாவம் எனப்படும் பாவங்களுள் சில நிலைபெற்றிருக்கும் பல சிறிதுநேரம் நின்று மறையும் தனக்கு ஒற்றுமையுடையனவும் வேற்றுமையுடையனவுமாகிய பிற பாவங்களால் கேடுறாமல், ரஸமாகிச் சமையுமளவும் நிலைநிற்கும் பாவம் ஸ்தாயி பாவம் (நிலைபேறுடைய பாவம்) எனப்படும்

அது காதல் முதலாக ஒன்பது வகைப்படும் உலகியலில் உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரணமாயும் காரியமாயும் துணைக் காரணமாயும் இருப்பவை கவியின் வாக்கியத்திலும் நடனின் அபிநயத்திலும் அறிவிக்கப்படும்போது, முறையே விபாவம் என்றும், அனுபாவம் என்றும், சஞ்சாரி பாவம் (நிலைபேறில்லாத பாவம்) என்றும் வழங்கப்படும் அஃதாவது,

காரணம் - விபாவம்

காரியம் - அனுபவம்

துணைக்காரணம் - சஞ்சாரிபாவம்