பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

செந்தமிழ் பெட்டகம்


பியூர்ன்சன் (1832-1910) தேசிய விஷயங்களை வைத்தே எழுத வேண்டும் என்றும், பேச்சு இயற்கையாக நிகழ வேண்டும் என்றும், சொற்பொழிவுப் பேச்சுக்கள் இடம் பெறலாகாது என்றும், தம் முதல் நாடகத்திலேயே வற்புறுத்தினார். இவருடைய மிகச் சிறந்த நாடகம் ஸ்காட்லாந்து அரிசி மேரி ஸ்ட்டுவர்ட் என்பது.

உலகப் புகழ் பெற்ற நார்வே நாடகாசிரியரான இப்சென் (1828-1906) என்பவர் தம் வாழ்க்கை முழுவதையும் நாடக வளர்ச்சிக்கே பயன்படுத்தினார். இவர் சிறந்த வரலாற்று நாடகங்களும் சமூக நாடகங்களும் எழுதியுள்ளார். இவர் மக்களிடையே நிகழும் அறவுறவுகளையே நாடகங்களின் பொருளாகக் கொண்டார். வாழ்வதும் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களும் வாழ்க்கையை இன்பமாக்கும் சாதனங்கள் அல்ல, அவையே இன்பமாகும் என்பதும், அறமே இறுதியில் நன்மை பயக்கும் என்பதும் இவருடைய உறுதியான கொள்கைகள். இள நாடகா ஆசிரியர்கள் இவரிடமிருந்து நாடகக் கலையைக் கற்றுக் கொண்டனார். சமூக சீர்திருத்தவாதிகள் இவரிடமிருந்து கருத்துகளைப் பெற்றனர். அறவுரையாளர்கள் இவர் நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் கூறினர்.

ஸ்வீடன் :

இந்நாட்டு அறிஞர் ஸ்ட்ரிண்ட்பர்கு (1848-1910) இயற்கையைத் தழுவி நாடகங்கள் எழுதுவதில் திறமையுடையவர். இவருடைய மிகச் சிறந்த நாடகம் தந்தை என்பது. இவர் எளிய காட்சிகளும் குறைந்த வேடப் புனைவும் போதும் என்று வற்புறுத்தினார். குனார் ஹைபர்கு (1857-1929) என்பவருடைய மாடி முகப்பு என்பதும், காதல் சோகம் என்பதும் நார்வே நாட்டுப் பேரிலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. அண்மையிலிருந்த சிறந்த நாடகாசிரியர்கள் ஹெல்கே கிராக் (1881 -) என்பவரும் நார்டால் கிரீக் (1902-43) என்பவருமாவர்.