பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

செந்தமிழ் பெட்டகம்


சுவான் (1725-85) என்பவர் சிறந்த நாடகாசிரியர். இவருடைய நாடகங்களுள் ஒன்பது மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் சீன இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம். குவோ மோ-ஜோ (1892) என்பவர் எழுதியுள்ள நாடகங்கள் புகழ் வாய்ந்தன. லவோ ஷிஹ் என்பவர் எள்ளித் திருத்தும் நாடகங்கள் எழுதியுள்ளனர்.

ஜப்பான் :

இங்கும் நாடகத்தின் தோற்றம் கிரீஸ் முதலிய பிற நாடுகளில் போலவே சமயத் தொடர்புடையதாக இருந்தது. ஆதியில் சமய விழா காலங்களில் ககுரா என்னும் பொம்மலாட்டம் நடைபெற்று வந்தது. இப்பொம்மலாட்டத்திலிருந்து நோ என்னும் நாடக முன்னோடி தோன்றிற்று. அவ்வாறு தோன்றியது 14ஆம் நூற்றாண்டிலாகும். நோ என்பதில் பாட்டும் வசனமும் காணப்படும். ஆனால் நடிப்பு மிகவும் குறைவு. நோ நாடகம் ஒன்றை அச்சடித்தால் 5-6 பக்கங்களில் அடங்கும். நடித்தால் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். நடிகர்களும் 5-6 பேர்க்கு மிகார். ஆண்கள் முகமூடி அணிந்து பெண்களாக நடிப்பர். உடைகள், ஆடம்பரமாயிருக்கும். காட்சி சோடனைகள் இரா. இத்தகைய நோ என்னும் நாடகங்களுள் மிகுந்த புகழ் பெற்றது. மோடோகியோ என்பவர் எழுதிய டாகலாகோ என்பதாகும்.

ஜப்பானிய இலக்கியத்தில் கியோஜென் என்பது பிரகசன வகையைச் சேர்ந்ததாகும். இது நாடகங்கள காட்சிகளுக்கிடையே நடிக்கப்படும். இதில் கோரஸ் கிடையாது. நடை பொதுமக்கள் பேச்சு நடையாயிருக்கும்.

பண்டை நாளில் ஜப்பானில் ஒருவர் கதையை நாடகம் போல் கூறுவர். அது தாய்கீக்கீ எனப்படும். இதுவும் நாடகம் தோற்றுதற்கு காரணமாயிருந்தது.