பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்திணை கூறும்



ஐங்குறுநூறு


ந்திணைகளில் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறை பெற்ற நூறு நூறு பாடல்களைத் தனித்தனிப் பெற்றுள்ளமையினால், ஐங்குறுநூறு இப் பெயர் பெற்றது. இதில் அமைந்த பாடல்கள் அகவற்பாவின் கீழ் எல்லையாகிய மூன்று அடிச் சிறுமையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை.

நூலுக்குப் புறம்பாகிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை, என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார், என்னும் ஐவராவர்.

ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக உள்ளது. இவற்றுள் ஒவ்வொன்றும் பத்து’ என்று குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு பத்தும் தனித்தனியான கட்டுக் கோப்பு உடையது. இது பொருளமைப்பினாலேயோ, இதனுள் அமைந்த பத்துப் பாடல்களிலும் ஆட்சி பெறும் ஏதேனும் ஒரு சொல்லினாலேயோ, பெயரிடப்பட்டிருக்கின்றது 'களவன் பத்து', 'மஞ்ஞைப் பத்து' 'தெய்யோப் பத்து', முதலியன சொல்லாட்சியினால் பெற்ற பெயர்கள். பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து', 'தோழி வற்புறுத்த பத்து' முதலியவை பொருளமைப்பால் பெற்ற பெயர்கள்.