பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

135


போல் அவ்விரண்டையும் தழுவியெழுந்த நாடிகை என்ற வகை சிறப்பு வாய்ந்த வகை பிரகசனம் என்பது. பிரகசனம் நகைச்சுவையை முக்கியமாய்க் கொண்டது. இது ஒர் அங்கத்திலோ, இரண்டங்கங்களிலோ இருக்கலாம். இதில் பெரும்பாலும், கீழ்ப்பட்ட பாத்திரங்களையும், ஒழுக்கம் தவறியவரின் சீலக்கேட்டையும் எடுத்துக் காட்டி, அவர்களின் நடத்தையை ஏளனம் செய்வதிலிருந்து சீர்திருத்தம் ஏற்படும் என்ற கொள்கை அடிப்படையாகக் கொள்ளப் பெறும். பொது மக்களுக் கிடையே முதன் முதலில் வழங்கி வந்த கூத்து வகைகளில் மேலினத்தோரையும் பெருமக்களையும் ஏளனம் செய்து காட்டும் கூத்து முதன் முதலிலேயே வழங்கி வந்ததென்று பரதர் தம் முதல் நூலில் சொல்லியிருக்கிறார். ஆனால் மிகப் பழமை வாய்ந்த பிரகசன இலக்கியங்கள் இன்று கிடைக்கவில்லை. நமக்கு இன்று கிடைத்துள்ள பிரகசனங்களுக்குள் மிகப் பழமை வாய்ந்தவை இரண்டு. இவ்விரண்டும் தமிழ் நாட்டில் காஞ்சியில் பல்லவ மன்னன் மகேந்திர விக்கிரமன் 7 ஆம் நூற்றாண்டில் எழுதியவை. இவ்விரண்டும் பழமை, இயற்றியவரின் ஏற்றம் என்னும் சிறப்புக்களுடன் பிரகசனப் பிரிவிலேயே இலக்கியவமைப்பு, நகைச் சுவையின் தரம் என்னும் இரண்டாலும் முதன்மை வாய்ந்து நிற்கின்றன.

இவ்விரண்டில் மத்த விலாசம் என்பது புறச் சமயத்திலிருந்து சைவத்திற்குத் திரும்பிய அரசன் மகேந்திரன் காஞ்சியில் அக்காலத்தில் உலவி வந்த பெளத்தரையும், காபாலிக சைவ சமயத்தோரையும் எள்ளி யெழுதியதாகும். மற்றொன்றில் மகேந்திரன் பெயர் ஆசிரியராகக் காணாவிடினும், அவருடைய மாமண்டூர்க் கல்வுெட்டில் மத்த விலாசத்துடன் சேர்த்து, இந்த இரண்டாவதான பகவதச்சுகம் என்ற பிரகசனமும் குறிக்கப் பட்டிருக்கிறது.பகவதச்சுகமே சமஸ்கிருத பிரகசனங்களுக்குள் நாயகம் போன்றது.