பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

13

 எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில், நெய்தற் பகுதியின் ஆசிரியராகக் குறிக்கப் பெற்ற நல்லந்துவனாரே ஏனைய பகுதிகளுக்கும் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதியுள்ளனர். ஐவர் பாடியதாகக் கூறும் தனிப் பாடல் மிகப் பிற்பட்ட காலத்தது என்றும், நூலின் நடை, அமைப்பு, போக்கு, முதலிய சில தனி இயல்புகளைக் கவனித்தாலும் இது ஒரே ஆசிரியர் இயற்றியதாகும் என்றே கொள்ளத் தக்கதாயுள்ளது என்றும், இவர் கருதுகின்றார். (History of Tamil Language and Literature, pp. 26-27) இங்ஙனம் மாறுபட்ட கருத்துக்கள் கலித்தொகை பற்றி நிலவுவதால், சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் குறித்தபடி, கோத்தவர் பெயராலேயே, 'நல்லந்துவனார் கலித்தொகை' என்று குறிக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பாடலின் கீழும் அவ்வப் பாடலுக்கு உரிய கூற்று விளக்கம் பற்றிய பழைய குறிப்பு உள்ளது. இக்குறிப்புக்கள் சில பாடல்களில் தொல்காப்பிய மேற்கோள்களுடன் மிக நீண்டும் செல்லுகின்றன. வேறு சில பாடல்களில் முன் பாடலுக்கு உரிய கூற்றே வந்தால், ‘இதுவும் அது' என்று குறிக்கபபட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும், 'இன்னார் கூற்று’ என்பது விளங்கச் சுருக்கமாகக் கூற்றுப் பற்றிய தலைப்பு இடப்பெற்றுள்ளது. மேலும், தலைவன், தலைவி, தோழி, முதலியோரது உரையாடலாக வரும் பாடல்களில் மட்டும் பேசுவோரின் பெயர் விளங்கச் சிறு தலைப்புக்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

கலித் தொகை முழுமைக்கும் நச்சினார்க்கினியரின் சிறந்த உரை அமைந்துள்ளது.