பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

177


கதாகுசுமமஞ்சரி மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையிலும் அதன் தொடக்கத்தில் ஒரு நீதி சிறிய சுலோகத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இது பிற்காலத்துச் சிறுகதை நூல்களுக்கு உதாரணமானது.

கதைப்பாட்டு

நாடோடி இலக்கியப் பரம்பரையைச் சேர்ந்த கவிதை வகை.எளிய கதையைப் பொருளாகக் கொண்ட இது தன்லமுறை தலைமுறையாகப் பாமர மக்களால் பாடப்பெற்று வழங்கிவரும். இது அன்றாட வாழ்க்கையில் நிகழும் சாதாரணமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எளிய நடையில் அமைந்திருக்கும். இதன் பாத்திரங்கள் சாதாரண மக்களாகவே இருப்பர். அம்மானையைப் போல் இதில் ஒர் அடியோ,சொல்லோ, சொற்றோடரோ திரும்பத் திரும்பப் பாடப்பெற்றுக் கதையின் கருத்தை வற்புறுத்துவது போல் இருக்கும். எளிய வடிவான எதுகையும் இப்பாட்டில் காணப்படுவதுண்டு. இதன் அமைப்பு இதை எளிதில் பாடக் கற்க ஏற்றதாக இருக்கும்.

கதைப்பாட்டு என்ற இலக்கிய வகை மக்களது வாயில் வாழ்கிறது என்று கூறுவதுண்டு. வாயின் வாயிலாகவே பரவும் இதை இயற்றியவர் யாராயினும் இதைப் பாடுபவரது உடைமையாகவே இது மாறி விடுகிறது. இதற்கு முன்னுரையும், பின்னுரையும், விளக்கமும் தேவையில்லை. பாடும்போதே இதன் கதையும் இதிலுள்ள கருத்தும் அனைவரும் அறியும் வகையில் இது அமைந்திருக்கும். ஒரு கதைப்பாட்டை ஒவ்வொருவர் பாடும்போதும் இதன் பாடம் வேறாக ஆகிவிடுவதுண்டு.

ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டிருக்கும் மக்கள் இனத்திற்கும், ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் மக்களுக்கும் சிறப்பான கதைப்பாட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு போரின்போதும் தனிப்பட்ட கதைப் பாட்டுக்கள் தோன்றுவதுண்டு.

செ. பெ.-ll-12