பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

செந்தமிழ் பெட்டகம்


அவருடைய கருத்தை ஏற்றுப் பல அறிஞர்கள் அத்தகைய கலைக்களஞ்சியத்தை இயற்றப் பல நாடுகளிலும் முயன்று வந்தார்கள். ஆயினும் என்சைக்கிளோப்பீடியா என்னும் சொல்லை முதன் முதலாகக் கையாண்டவர் 1541-ல் ஜெர்மனியிலிருந்த ரிங்கல்பர் ஜியஸ் என்பவரே ஆனால், இப்பொழுதுள்ள கலைக் களங்சியங்களில், பொருள்களை வரிசைக் கிரமப்படுத்தியிருப்பது போல, முதன்முதலாக வரிசைக் கிரமப்படுத்தித் தந்தவர் ஆலஸ்டெட் (1588-1638) என்ற ஜெர்மானியரே.

ஆங்கில நாட்டில் முதன் முதலாகப் பொருள்களை அகர வரிசையாகக் கிரமப்படுத்தி (1704-ல்) அச்சிட்டவர் லண்டனில் இருந்த ஜான் ஹாரிஸ் (1667-1779) என்னும் பாதிரியாராவர். அதன் பிறகு இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, சேம்பர்ஸ் என்பவர் பாதிரியாருடையதை விடச் சிறந்ததான ஒரு கலைக்களஞ்சியம் தயாரித்தார். 1748-49ல் வெனிஸ் நகரத்தில் வெளியான, சேம்பர்ஸ் நூலின் இத்தாலிய மொழி பெயர்ப்பே முதன்முதல் இத்தாலியில் தோன்றிய கலைக்களஞ்சியமாகும். -

ஜெர்மனியில் ஜெட்லெர் என்னும் புத்தக வாணிகர் தயாரித்து 64 தொகுதிகளாக 1732 50-ல் வெளியிட்ட கலைக்களஞ்சியம் இக்காலத்துக் களஞ்சியங்களின் அமிசங்கள் பலவற்றைக் கொண்டதாகும். பல துறைகளிலுள்ள பொருள்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இது இப்பொழுதும் ஒரு முக்கியமான நூலாக இருந்து வருகிறது.

பிரான்ஸில் வசித்து வந்த மில்ஸ் என்னும் ஆங்கிலேயர் ஒரு புத்தக வெளியீட்டுக் கம்பெனிக்காக சேம்பர்ஸ் கலைக்களஞ்சியத்தை பிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். ஆனால் வெளியிடுகிறவர் அதில் திருப்தி கொள்ளாமல் அந்த வேலையை டீடரோ என்னும் பிரெஞ்சு ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அவர் மொழிபெயர்ப்பதை விட்டுப் புதிதாக எழுத ஏற்பாடு செய்தார்.