பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

செந்தமிழ் பெட்டகம்


கலைக்காட்சி மண்டபம் என்பது ஒவியங்கள், சிலைகள், சிற்பங்கள் முதலிய கலைப்பொருள்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் இடமாகும் கலைக்காட்சி மண்டபம் என்ற சொல் புதியதாக இருக்கலாம் ஆனால் அதில் அடங்கியுள்ள கருத்து மிகத் தொன்மையானது. தொடக்க கால மனிதன் தான் வாழ்ந்த குகையை, விலங்கு, பறவை முதலியவற்றின் படங்களால் அணி செய்த போதே கலைக்காட்சி மண்டபம் பற்றிய கருத்து தோன்றி விட்டது. பண்டைக் கால நாடுகளில் கோயில்கள் ஒவியங்களாலும் சிலைகளலாலும் அழகு செய்யப்பட்டிருந்தன என்பது கலைக்காட்சி பற்றிய கருத்தைப் பண்டை நாகரிக மக்கள் பெரிதும் போற்றினர் என்பதைக் காட்டுகின்றது. எகிப்தில் கார்னாக்கிலுள்ள மாபெருங் கோயில்களும் சீனவிலுள்ள டுங்ஹூவாங் குகைகளும் இந்தியாவி லுள்ள அஜந்தா, எல்லோராக் குகைகளும், மெசப்பொட் டேமியாவிலும் பாரசீகத்திலும் புதையுண்ட சின்னங்களும், பண்டைக்கால ஒவியங்கள், சிலைகள் போன்ற கலைப்பொருள்களின் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

இக்காலக் கலைக்காட்சி மண்டபம் தோன்றி நானூறு ஆண்டுகளே ஆகின்றன. இது முதன்முதலாக ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் தொடங்கப் பட்டது. ஒவியம் முதலிய கலைத்துறைகளில் பல்வேறு வகையான நடைகளும் மரபுகளும் அமையப் பெற்றதையொட்டிக் கலை வளர்ச்சிக் கழகங்கள் பல தோன்றின.