பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

செந்தமிழ் பெட்டகம்


வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந்தொண்டர். இவருடைய பதிப்பைத் தமிழ்ப்புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும், நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும் அற்புதமானவை. நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் பலவகையான விளக்கங் களும் பல நூல்களிலிருந்து எடுத்துக் காட்டிய ஒப்புமைப் பகுதிகளும் காட்சி தரும். இறுதியில் நூலிற் கண்ட சொற்களுக்கும் பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆகையால் ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் அமைந்தவை இவருடைய பதிப்பு நூல்கள்.

முன்னுரை முதலியவற்றில் உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய அளவில் வெளிப்படுத்திய இப்பேராசிரியர் தாம் பதிப்பித்த நூல்களின் அங்கமாக மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் என்பவற்றை எழுதினார்,

இவர் கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னை அரசியலார் கல்லூரிக்குத் தமிழாசிரியராக 1903ஆம் ஆண்டு வந்து, 1919ஆம் ஆண்டு வரை இருந்து, பின்பு ஒய்வு பெற்றார்.

கல்லூரியில் வேலை பார்த்தபோது வீட்டில் தனியே இவரிடம் பலர் பாடம் கேட்டார்கள். அவர்களில் மகாபாரதத் தமிழ் மொழி பெயர்ப்பின் பதிப்பாசிரியராகிய மகாமகோபாத்தியாய ம.வி. இராமானுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி மடத்தின் தலைவராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் சிலகாலம் இவரிடம் பாடம் கேட்டதுண்டு. இவரிடம் பயின்று, ஆராய்ச்சி முறையைக் கற்றுக் கொண்டு, பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள் பின்னத்துர் அ. நாராயணசாமி ஐயர், இவை. அனந்தராமையர் என்போர்.