உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

211


திருந்த பாரதியாரின் பாட்டு ஒன்றைப் பார்த்துக் கோபங் கொண்டார். அதைக் காரணமாகக் கொண்டு இவர் எட்டையபுரத்தை விட்டு 1904-ல் வெளியேறினார்.

பிறகு, இவருக்கு மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது. ஆனால், மூன்றுமாத காலமே 1904 செப்டம்பர் முதல் நவம்பர் இறுதிவரை அவ்வேலையிலிருந்து விட்டு, அதே ஆண்டில் இவர் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் துணையாசிரியராகிப் பத்திராதிபரான ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆதரவில் தேசபக்தர்களைப் போற்றியும், போலிகளைப் பரிகசித்தும் பாடல்கள் பாடினார்; கட்டுரைகள் எழுதினார். 1906-ல் தாதாபாய் நெளரோஜி தலைமையில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரசுக்குப் போயிருந்தார். அங்கே விவேகானந்த அடிகளின் மாணவியான நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஆசியும் ஞானோப தேசமும் பெற்றார்.

தேசியத் தலைவர்களின் திலகமாகப் பாரதியாரால் மதிக்கப் பெற்றவர் பாலகங்காதர திலகரேயாவார். ‘வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே’ என்ற திலகர் துதி ஒன்று பாடினார்.

பாரதியார் தமது வாழ்க்கையை ஆட்கொண்ட மூன்று காதலைக் குறித்துப் பாடியிருக்கிறார். தமது இருபத்திரண்டாம் வயது வரை - அதாவது 1907வரை கலைமகள் காதலாக வாழ்க்கை கழிந்ததென்றும், பிறகு திருமகள் காதல் தம்மைக் கவர்ந்தும், அவள் அருள் போதுமான அளவிற்குக் கிடைக்கவில்லையென்றும், கடைசியாகப் பராசக்தி காதல் ஆட்கொண்டதென்றும் பாடியிருக்கிறார். அன்னை பராசக்தி ஏழையேன் கவிதையாவும் தனக்கெனக் கேட்கிறாள்’ என்று கூறுகிறார். பராசக்தி பாரதியாருக்கு உலக அன்னையும் பாரத சக்தியுமாகிறாள்; தமிழன்னையாகிறாள்; சுதந்திர வெறியூட்டுகிறாள்.