புலவர் த. கோவேந்தன்
219
அமைகிறது. உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று நம் கவிஞர் கூறியிருக்கும் கவிதை மர்மம் 'காட்சி’ ‘சக்தி' என்ற இரண்டு வசன கவிதைகளுக்கும் பொருந்துவதுதான்.
பாரதியாரின் வசனம் :
எளிய சொற்களைக் கொண்டு அபூர்வ எளிமை வாய்ந்த நடையில் கவிதைகள் செய்து தமிழுக்குப் புத்துயிர் தந்திருக்கும் பாரதியார் தமிழ் வசனத்திற்கும் ஒரு வழிகாட்டி. இவரது முழுப்பெருமையையும் உள்ளபடி உணர்ந்து கொள்வதற்கு இவர் தந்திருக்கும் வசன இலக்கியத்தையும் தக்க முறையில் ஆராய்ந்து மதித்துக் கற்பது அவசியமாகும்.
ஞானரதம் என்னும் நூலில் ஆழ்ந்த உணர்ச்சிகளும் அதிசூட்சும அனுபவங்களும் தெள்ளத் தேறித் தெளிந்து தித்திக்கும் அமுதத் தமிழில் அற்புதக் கற்பனைகளாகச் சிறு சிறு வாக்கியங்களில் வெளிப்படக் காண்கிறோம். இத்தகைய சொற்களைத் திறனுடன் நகைச்சுவைப் பகுதிகளும் கலந்து 'ஞானரத'த்திற்கு ஒரு தனியழகு தந்திருக்கின்றன.