பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

221


திலகரும், தென்னாட்டில் இவரும் விடுதலைப் போர்த் தளபதிகளாக விளங்கினர். வெளிநாட்டுப் பண்டங்கள் பகிஷ்காரமும் சுதேசிப் பொருள்கள் ஆதரவும் வளர்ந்தோங்கின. தூத்துக்குடியில் தருமசங்க நெசவுச் சாலையும் சுதேசிப் பண்டகச்சாலையும் இவரால் தோற்றுவிக்கப்பட்டன. ஊரூராகச் சென்று இவர் உரிமை முழக்கம் செய்து வந்தார்.

தூத்துக்குடி ஒரு துறைமுகப் பட்டினம்; பெரிய வாணிகத்தலம். கடலாதிக்கம் படைத்திருந்த ஆங்கிலேயர் இந்திய வணிகர்களைத் தாழ்வுற நடத்தியமை கண்ட இவர் மனம் கொதித்தது. சுதேசிக் கப்பல் கம்பெனி காண முனைந்தார். பங்குக்கு ரூ. 10 வீதம் 10 இலட்சம் ரூபாய் மூலதனத்துடன் 1906-ல் சுதேசிக் கப்பல் கம்பெனி பதிவாயிற்று. மூலதனத்துக்கு வடநாடும் தென்னாடும் பொருளீந்தன. பங்குகள் சேர்க்க இவர் வடநாடு சென்ற போது திலகருடன் நெருங்கிய நண்பரானார்.

தமிழர்கள் சார்பிலே, 'லாவோ’, ‘காலியா' என்ற கப்பல்கள் சுதேசிக் கப்பல் கம்பெனிக்குச் சொந்தமாக வாங்கப் பெற்றன. இவரே பம்பாய் சென்று மிக்க சிரமத்தின் பேரில் அவற்றை வாங்கி வந்தார் மற்றும் பல கப்பல்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனி போட்டிக்காகக் கட்டணங்களைக் குறைத்துச் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்கிவிட முயன்றது. இவர் சுதேசிக் கப்பல் கம்பெனியிலிருந்து விலகிவிட்டால் பெருந்தொகை தரவும் வெள்ளையர் முன் வந்தனர். இவர் ஒப்பவில்லை.

துரத்துக்குடியில் உள்ள வெள்ளையருக்குச் சொந்தமான பஞ்சாலை, தொழிலாளரின் ஊதியத்தைக் குறைத்தது. அவர்கள் இவரிடம் முறையிட்டனர். அதனால், தொழிலாளர் உரிமைப் போராட்டத்துக்கும் இவர் தலைமை ஏற்றார். வேலை நிறுத்தம் செய்ய வழி காட்டி