பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

செந்தமிழ் பெட்டகம்


னார். பாட்டாளிகள் துன்பத்தைத் துடைக்க வ.உ.சி. தம் மனைவியின் நகைகளை விற்றும், ஊரில் பொருளும் பண்டங்களும் திரட்டியும் உறுதுணையாக விளங்கினார். வேறு வழியின்றி மில் முதலாளிகள் வழிக்கு வந்தனர். தொழிலாளரின் உரிமைப் போர் வெற்றி கண்டது. வேலை நிறுத்தத்தின்போது மில் தலைவர்களான வெள்ளையர்கள் உயிருக்கு அஞ்சி அருகிலுள்ள முயல் தீவில் சின்னாட்கள் தங்கினர்.

வெள்ளையர் இவரை அடக்கிவிட அரசாங்கத்தின் துணை நாடினர். இவர்மீது அதிகாரிகள் முதலில் தொடர்ந்த ஜாமீன் வழக்குத் தோற்றது. விபின் சந்திர பாலரின் விடுதலை நாளன்று (9-3-1908) திருநெல்வேலியில் தாம்பிரவருணிக்கரையில் பெருங்கூட்டத்தில் இவரும், சுப்பிரமணிய சிவா (த.க.) என்ற விடுதலை வேட்கை கொண்ட துறவியும் விடுதலை முழக்கம் செய்தனர். அரசாங்கத்தார் இவர்கள் மீது அரச நிந்தனை வழக்குத் தொடர்ந்தனர். இந்தச் சமயத்தில் சென்னையில் ‘இந்தியா’ பத்திரிகை நடத்தி வந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் நெல்லைக்கும் தூத்துக்குடிக்கும் சென்று, வ.உ.சி.ஐக் கண்டு பேசினார். பாரதியார் சிறை புகாமல் புதுவை செல்ல இச் சந்திப்பே காரணம் என வ.உ.சி. கூறியுள்ளார்.

சிதம்பரம்பிள்ளை மீது தொடரப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெருங்கொதிப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு விசாரணைக்கென்றே நீதிபதியாக நியமிக்கப் பட்ட பின்ஹே துரை இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு ஓராயுள் தண்டனையும் விதித்து 7-7-1908-ல் தீர்ப்பளித்தார். நெல்லை மாவட்டத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்து, சர்க்கார் முனிசிபல் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர். உயர் நீதிமன்ற முறையீட்டில் இரண்டடை ஆயுட் கடுஞ்சிறை, ஆண்டுக் கடுஞ்சிறையாகக் குறைந்தது.