பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

223


வ.உ.சி. சிறையில் இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றார். சிறையிலே பல அரிய நூல்கள் எழுதினார். முதலில் கோயம்புத்துார்ச் சிறையிலும், பின்பு கண்ணனுார்ச் சிறையில் ஒரு வெள்ளைச் சிறையதிகாரி இவரைக் கொடுமையாக நடத்தியது கண்டு கொதித்த கைதிகள் கலகம் செய்தனர். இதன் விளைவாகச் சிறைச் சீர்த்திருத்தக் குழு ஏற்பட்டது கைதிகளின் இன்னல்கள் குறைந்தன.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இங்கிலாந்தில் ஆட்சிப் பீடம் ஏறியதை முன்னிட்டுச் சிறைத்தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு, 1911 டிசம்பரில் வ.உ.சி. விடுதலை அடைந்தார்.

சென்னையில் சிலகாலம் தங்கி, நெய், அரிசி வாணிகம் செய்து வாழ்க்கை நடத்தினார். வ.உ.சி. வறுமையில் இடுக்கணுற்று வாடுவதறிந்த உயர் நீதிமன்ற வெள்ளை நீதிபதி வாலஸ் என்பவர் உதவியால் வ.உ.சி. வழக்கறிஞர் தொழிலை மீண்டும் செய்வதற்கான விருது பெற்றார். இந்த நன்றியை மறவாமல் வ.உ.சி. தம் குமாரர்களில் ஒருவருக்கு வாலேஸ்வரன்’ என்று பெயரிட்டார். இக்காலத்தில் இவருக்குத் திலகர் மாதந்தோறும் பொருள் உதவி வந்தார்.

வ.உ.சி. 1936ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவுற்று அவ்வாண்டு நவம்பர் 18ஆம் தேதி மறைந்தார். நாடு விடுதலையடையவில்லையே என்பது அப்போதும் அவரது பெருமனக்குறை.

சுதந்திரமடைந்த பாரதத்தில் தமிழ்நாடு முழுவதி லும் இவர் பெயரால் கழகங்களும் மன்றங்க்ளும் தோன்றி, இவரது நினைவுக்கு நிலைக்களன்களாக இலங்குகின்றன. ஒட்டப்பிடாரத்தில் இவர் பிறந்த வீட்டைத் தேசிய நினைவுச் சின்னமாக்க அரசினர் முன் வந்துள்ளனர்.