பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

21



அரசருள் முனிவனே யாயினும் அவன் செய்தது தவறு தான் என்று தயங்காமல் பேசினர் சிலர்.” வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இப்பிள்ளை முன் இட்டது பேதைமை “ என்றார். மேதையாகிய மன்னவன் செயலைப் பேதைமை என்று அச்சமின்றி கூறும் உரிமை மிதிலை மக்களுக்கு இருந்தது என்பது இதனால் இனிது விளங்குகின்றது.

இவ்வண்ணமே தசரத மன்னன், கைகேசி கேட்ட வரத்தைக் கொடுத்து மூத்த மைந்தனாகிய இராமனைக் காட்டுக்கு அனுப்பிய கொடுமையைக் கண்ட அயோத்தி மக்கள் அரசன் செய்தது தவறு என்று தயக்கமின்றிப் பேசினார்கள். “ஆதி அரசன் அருங்கேகயன் மகள்மேல், காதல் முதிரக் கருத்தழிந்தான்” என்றார்கள். எனவே, நல்லரசாட்சி நடைபெற்ற மிதிலையிலும் அயோத்தியிலும் அதிர்ச்சி தரும் செயல்கள் நிகழ்ந்த போது மக்கள் குரல் தெளிவாகக் கேட்டது. ஆனால் இலங்கையில் என்ன நடந்தாலும் குடிகள் பேசாது வாயடங்கி இருந்தனர் என்பது கம்பராமாயணத்தால் விளங்குகின்றது. அரசன் கருத்திற்கு ஒவ்வாத செயல்களை மக்கள் பேசும் உரிமை இலங்கை நாட்டில் இல்லை. இதனைச் சூர்ப்பணகை மானபங்கமுற்ற செய்தியால் உணர்த்துகின்றார் கம்பர். இராமுற்ற செய்தியால் உணர்த்துகின்றார் கம்பர். இராவணனிடம் எவரேனும் சென்று சூர்ப்பனகை மூக்கறு பட்டாள் என்று சொன்னால் சொன்னவரது நாக்கை முதலில் அறுத்து விடுவானாம் அரக்கர் கோமான். இதனால் வல்லரசு ஆட்சியில் மக்கள் வாய்விட்டுப் பேசும் உரிமையற்றிருந்தனர் என்பது தெளிவாகின்றது.

மாநிலம் ஆளும் அரசன் மன்னுயிர்க்காவே வாழ்தல் வேண்டும் என்பது கம்பர் கருத்து. மன்னனை உயிராகவும் மன்னுயிரை உடலாகவும் கருதுதல்

தமிழ் மரபு மரபினை மாற்றிக் குடிகளை உயிராகவும் மன்னனை உடலாகவும் பாடியுள்ளார் கம்பர்.