பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

229


இந்தியாவில் வந்து சேர்ந்தார். நவம்பரில் இவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பெற்றது. கல்கத்தாப் பல்கலைக் கழகம் கெளரவ இலக்கியப் பெரும் புலவர் என்ற பட்டம் அளித்தது.

காந்தியடிகள் 1915-ல் தென் ஆப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்து சேர்ந்தார். அவ்வாண்டு மார்ச்சுத் திங்கள் ரவீந்திரரைச் சந்திக்க வந்தார் அப்போதே கவிஞர் காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற தலைசிறந்த பெயரைச் சூட்டினார். அவ்வாண்டிலே அரசாங்கத்தார் ரவீந்திரருக்கு சர் பட்டம் வழங்கினார்கள்.

அக்காலத்தில் பிற நாடுகளைக் கெடுத்துத் தன் நாட்டை வாழ்விக்கும் தேசீயம் என்னும் கொள்கை மேனாடுகளிலும் ஜப்பானிலும் தலைதுாக்கி நின்றது. 1916-ல் ரவீந்திரர், தீனபந்து சீ.எப் ஆண்டுரூஸ் உடன் ஜப்பான் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் அக் கொள்கையைக் கண்டித்தபோது அந்நாட்டு மக்களுக்கு அது பிடிக்கவில்லை.

அதனால் ரவீந்திரர் அங்கிருந்து அமெரிக்கா சென்று, பிரிட்டிஷார் ஆட்சியைக் கண்டித்துச் சொற் பொழிவுகள் செய்துவிட்டு, 1917-ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்

முதல் உலகப்போர் 1918-ல் முடிந்தது. 1919ல் பஞ்சாபில் அட்டுழியங்கள் நிகழ்ந்தன காந்தியடிகள் சத்தியாக்கிரக இயக்கத்தைத் துவக்கினார். ரவீந்திரர் உடனே தமக்கு அரசாங்கம் அளித்திருந்த சர் பட்டத்தைத் துறந்து விடுவதாக வைசிராய்க்குக் கண்டனக் கடிதம் எழுதினார்.

ரவீந்திரர் 1919-ல் தமது சாந்திநிகேதன நிலையத்தில் பண்டை இந்திய இலக்கியங்களையும், திபெத்து, சீன இலக்கியங்களையும் ஆராயும் நிலையமாக வித்தியா பவனம் என்பதை நிறுவினார்.