பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

செந்தமிழ் பெட்டகம்



“வையம் மன்னுயிராக அம்மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னவன்” என்ற பாட்டால் இதனை உணர்த்துகிறார்.

கம்பராமாயணத்தில் அகச்சான்றாகக் கிடைக்கும் குறிப்புக்களால் கம்பர் கற்றிருந்த நூல்களின் பரப்பும், பெற்றிருந்த புலமையின் சிறப்பும் நன்கு அறியப்படும். புறநானூறு முதலிய பழந்தொகை நூல்களும், திருவள்ளுவர் அருளிய திருக்குறளும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களும் கம்பரது காவியத்தில் எடுத்து ஆளப்படும் நயத்தினை ஆராய்ந்து அறிதல் கவிச்சுவை தேரும் அறிஞர்க்கு ஒர் இலக்கிய விருந்தாகும்.

செய்ந்நன்றியறிதல் என்னும் பண்பினைச் செப்பமாகப் பாடினார் திருவள்ளுவர். “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்று அவர் அருளிய திருக்குறளின் பொருளைப் புறநானூற்றுப் பாட்டொன்று விரித்துரைத்து விளக்குகின்றது. “ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும் “ என்று தொடங்கும் அப்பாட்டைத் தழுவிச் செய்ந்நன்றி அறியும் செம்மையைச் சொல்லின் செல்வனாகிய அநுமன் வாயிலாக விரித்துரைக்கின்றார் கம்பர். இன்னும் மேலே “நுணங்கிய கேள்வியரல்லார் வணங்கிய வாயினராதல் அரிது” என்ற திருக்குறளின் பொருளுரைக்குச் சான்றாக அனுமனைக் காட்ட முணைந்த கம்பர். “ வணங்கிய சென்னியன், மறைத்த வாயினன், நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான்” என்று வள்ளுவர் சொல்லையும் பொருளையும் பொன்போற் போற்றிப் பாடியுள்ளார். சித்தாமணியின் சொல்லோவியங்களும் வர்ணனைகளும் கம்பரது பெருங்காவித்தில் அமைந்து அழகு செய்கின்றன. போவிந்தையார் இலம்பகத்தில் சீவகனது உலாவியலை வருணிக்கும் பாடல்களையும் பாலகாண்ட உலாவியல் படலத்தில் இராமனது உலாவியலை எழுதிக் காட்டும் பாடல்களையும் ஒப்பிட்டு நோக்குவார்க்கு இவ்வுண்மை இனிது விளங்கும்.