பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

23


கம்பர் எடுத்தாளும் உவமைகள் பொருள் நயம் வாய்ந்தனவானவும் நல்லறிவு புகட்டுவனவாகவும் விளங்குகின்றன. தாடகையின் நெஞ்சை ஊடுருவிச் சென்ற இராம பாணம், 'புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என' ப் புறம் போயிற்று என்று கூறுகின்றார். தசரத மன்னன் இராமனுக்கு முடிசூட்டித் தன் உயிர்க்கு உறுதி பயக்கும் தவ நெறியை மேற்கொள்ளக் கருதிய போது, அரசனுக்கு விடை கொடுக்கவும் மனமில்லாமல் இராமன் உடனே மன்னனாகும் வாய்ப்பினைக் கைவிடவும் மனமில்லாமல் இடையூசலாடிய மனத்தோடு வாளாவிருந்த அயோத்தி அமைச்சர், 'இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஒர் ஆவென இருந்தார்” என்று கவிஞர் கூறுகின்றார். இன்னும் சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி என்றும், நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்' அகத்தியன் என்றும் கம்பர் கூறும் உவமைகள் சிறந்த பொருள் நயம் வாய்ந்தனவாகும்

கம்ப ராமாயணத்தில் இல்லாத சில உவமைகளும் கம்பருடையனவாகப் பாமர மக்களால் கருதப்படுகின்றன. போர்க்ககளத்தில் வீறுடன் எழுந்த இராம பாணத்தைக் கண்ட போது 'கடன் கொண்டான் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று நாடெங்கும் வழங்குகின்ற பாடல் கம்பருடையதன்று என்பதைக் கற்றோர் அறிவர்.

கம்பருடைய வாக்குக் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாகும், 'தோள் கண்டார் தோளே கண்டார்; தாள் கண்டார் தாளே கண்டார்' என்று கம்பர் இராமனைப் போற்றிப் பாடிய வாசகம் இப்பொழுது எங்கும் வழங்கி வருகின்றது. இவ்வண்ணமே ‘அவன் தம்பி அங்கதன்' என்னும் வசனம் கம்பராமாயணத்தைத் தழுவி எழுந்ததாகும். பிறப்பு முறையில் அங்கதன் அனுமனுக்குத் தம்பி என்பது ‘மாருதி அல்லனால் நீ எனும் மாற்றம் பெற்றேன்' என்று அங்கதன் கூற்றாகக் கம்பர் பாடுதலால் நன்கு புலனாகின்றது.