பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

செந்தமிழ் பெட்டகம்

 ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு இன்றியமையாதது பயிர்த் தொழில் என்பது கம்பர் கொள்கை. உணவுப் பொருள்களை விளைவித்துப் பசிப்பிணியை ஒழிப்பது பயிர்த்தொழில். இவ்வாறு நாட்டைப் பாதுகாப்பதோடு மாநில மன்னனது செங்கோல் சிறப்புற நடப்பதற்கும் சாதனமாகிய வேளாண்மையின் சிறப்பினை 'ஏர் எழுபது' என்னும் நூலில் கம்பர் எடுத்துரைத்தார். வேளாளர் தலைவர்களின் குலத்தைச் சிறப்பித்துக் கூறும் ‘திருக்கை வழக்கம்' என்ற நூலும் கம்பரால் பாடப்பட்டதென்று கர்ண பரம்பரைச் செய்தி கூறுகின்றது. இன்னும் நம்மாழ்வார் மீது பாடப்பெற்றுள்ள சடகோபர் அந்தாதியும், கலைமகள் மீது பாடப் பெற்றுள்ள சரசுவதி அந்தாதியும் கம்பர் இயற்றிய நூல்களாகக் கருதப்படுகின்றன. தனிப்பாடல் திரட்டு முதலிய நூல்களில் கம்பர் இயற்றிய பாடல்களாகக் கூறப்படும் கவிகள் பலவுண்டு.

காவிரியின் நடுவே உள்ள திருவரங்கத்தில் கம்பரது பெருங் காவியம் அரங்கேற்றப்பட்டது என்றும் , அரங்கேற்ற விழா நடைபெற்றபொழுது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும் கூறுவர். தமிழ் நாட்டிலுள்ள சமய வாதிகள் எல்லோரும் கம்பராமாயணத்தின் அருமை பெருமைகளை அறிந்து ஏற்றுக்கொண்டனர் என்றும் சொல்லப்படுகின்றது.

கம்பராமாயணத்தின் பெருமை மலை கடந்தும் அலை கடந்தும் சென்றது என்பதற்குச் சில சான்றுகள் உண்டு. மலையாள மொழியில் எழுதப்பட்டுள்ள 'ராம சரிதம்’ என்னும் பெயருடைய இராமாயணம் கம்பராமாயணத்தின் சொல்லையும் பொருளையும் பல இடங்களில் தழுவிச் செல்லுகின்றது. கீழை நாடுகளில் உள்ள இராமாயணச் சிற்பங்களும், நாட்டுப்புறக் கதைகளும் கம்பராமாயணத்தைத் தழுவி எழுந்தன,