34
செந்தமிழ் பெட்டகம்
செய்தலும் சீவகாருணியத்தின் பாற்படும். எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும் என்பது வள்ளலார் வாக்கு.
உலகம் அழிவுப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலைமாறி உலகம் உய்வதற்கு வழி யாது என்று மேனாட்டுச் சான்றோர் ஆல்பர்ட் தஸ்வைட்சர் ஆராய்ந்து பார்த்து, 'உயிர்கள் வழி படத் தக்க புனிதம் வாய்ந்தவை என்ற எண்ணமும், செயலிலே சீரிய அன்பும் வேண்டற்பாலன' என்று முடிவு காண்கிறார். சீவ காருணியம் என்று வள்ளலார் வற்புறுத்தி வந்ததன் இன்றியமையாமை மிகத் தெளிவாகிறது.
வள்ளலார் சாகாநிலையைப் பற்றிப் பேசுகிறார். ‘மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும். இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களும் எனக்கறி வித்த வண்ணமே அறிவித்த அவரவர்களையும் உரிமையுடை யவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்’ என்று இறைவனை வேண்டிக் கொள்கிறார்.
இவ்வுடலையே அழியாமல் நிலைபெறச் செய்யும் ஆற்றல் சித்தர்களுக்கு உண்டு என்று கூறுவர் சிலர். சாகாநிலை என்பது மீண்டும் பிறவா நிலை என்று பொருள் கூறுவர் வேறு சிலர். வள்ளலார் வற்புறுத்திய சீவகாருணியத்திற்கிணங்கவே வள்ளுவர் வாய் மொழியையும் நினைத்தின்புறலாம். ‘கொல்லா அறத்தை மேற்கொண்டு ஒழுகுபவன் வாழ் நாள்மேல் உயிரைக் கவர்ந்து செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்’
‘அன்புருவம் பெற்றதன் பின் அருளுருவம் அடைந்து பின்னர், இன்புருவம் ஆயினை நீ, எழில் வாத வூரிறையே' என்று மணிவாசகரைப் பற்றி வள்ளலார் பாடுகிறார். இது வள்ளலார்க்கும் பொருந்துவதே என்பது நினைந்து இன்புறற்பாலது.