பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

செந்தமிழ் பெட்டகம்


சீன தேசத்தில் சங்கீதம், நடனம் ஆகிய இவைகளின் சேர்க்கையில் நாடகம் பிறந்தது. ஜப்பானியர் நாட்டில் இதை அடிதட்டு மக்களே விரும்பினதாகத் தெரிகிறது. எரிமலைக் குழப்பம் நிகழாவண்ணம் சாம்பசோ என்ற நடனத்தைப் பயின்றார்களாம். அந்நடனந்தான் அந்நாட்டின் நாடகத்திற்கு மூலமென்று கருதுகின்றனர். பாரசீகத்திலும், முஸ்லீம்கள் இருக்கிற பிரதேசத்திலும் முகம்மது நபி, பாத்திமாஅலி, இவர்களின் மரணங்களைப் பற்றியெழுந்த ஓலங்களிலே நாடகம் பிறந்தது என்று எண்ணுகின்றனர்.

எகிப்து நாட்டில் ஆசையரிஸ் வழிபாட்டில் நாடகம் தோன்றிற்று. இசைக் கலையை அவர்கள் போற்றி வந்தனர். கிரேக்க நாட்டில் பாக்கஸ், டைய னைசஸ், அப்பாலோ, டிமிட்டர் என்ற தேவதை களின் வழிபாடுகளிலிருந்த நாடகம் தோற்றிற்றென்று கூறு கின்றனர். ஐரோப்பா முழுவதுமே இயேசு நாதரின் வரலாறு, கிறிஸ்தவ மகான்கள் புரிந்த அற்புதச் செயல்கள், நன்மை தீமைகளுக்கிடையே நிகழும் இடையறாத போராட்டம் இவைகளில்தான் நாடகம் பிறந்தது என்பர்.

துன்பியல் நாடகம் பாக்கஸ் என்னும் நறவுத் தேவனைக் குறித்து இசைக்கப்படும் பாட்டில் பிறந்தது. நகைச்சுவை நிரம்பிய இன்பியல் நாடகமானது லிங்கம் கட்டி ஆடும் சடங்கைக் குறித்து எழுந்த பாடல்களில் தோன்றிற்று என்று அரிஸ்டாட்டில் மொழிகின்றார். ஆகவே எங்கும் சமயச் சடங்குகளே நாடகத்திற்குப் பிறப்பிடம் என்று தெரிகிறது.

தமிழை இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாகக் கூறப்படும் காரணத்தால், தமிழ் நாட்டில் நாடகக் கலை தழைத்தோங்கி யிருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

நாடக இயல்பு :

ஒரு நாடகத்தில் ஒரு செயலோட்டம் வேண்டும். அதைப் பார்க்க மக்கள் வேண்டும், நாடகம் நிகழ ஒரு