பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

செந்தமிழ் பெட்டகம்

'


நகைப்பும் அழுகையும் கலந்திருப்பதால் இன்பியல் நாடகத்தில் சோகத்திற்கும், துன்பியலில் நகைச்சுவைக்கும் இடமுண்டு என்பதை ஷேக்ஸ்பியர் நாடகங்களிற் காணலாம்.

பண்டைக் காலத்தில் புராணக் கதைகளையே நாடக ஆசிரியர் தமக்குப் பொருளாகக் கொண்டனர். இடைக் காலத்திலே இயேசு நாதர் பிறப்பு, வளர்ப்பு, மகான்களின் அற்புதச் செயல்கள், அருங் குணங்களின் போராட்டங்கள் ஆகிய இவைகளை வைத்துக் கொண்டு நாடகங்களைச் சமைத்தனர்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில்தான் புத்துலகந் தொடங்குகின்றது. நாடக உலகத்தில் ஒரு மேருவாய்த் திகழ்கின்ற ஷேக்ஸ்பியர் பிறந்த காலமது. தெய்வத்தின் செயல் நாடகத்தில் தேவையில்லை. மனிதனுடைய உள்ளமே உணர்ச்சிப் போர்களுக்கு ஒரு செருக்களமாய் விளங்குகின்றது. மனிதனுடைய ஏற்றத் தாழ்வு களுக்கு அவன்பால் அமைந்த குணங்களே காரணங்களாய் அமைகின்றன. அழுக்காற்றால் ஒதெல்லோ அழிகின்றான். பேராசையால் மாக்பெத் மாள்கிறான், எத்தனையோ உயர்குணங்கள் இருந்தாலும், ஒரு தீய குணத்தால் அத்தனையும் அழிவுறுகின்றன. இதைக் கண்ட நம் மனத்தில் ஒரு பரிவு பிறக்கின்றது.

துன்பியல் நாடகத்தால் நம் உள்ளம் மாசு மறுவறக் கழுவப்படுகின்றது என்று அரிஸ்ட்டாட்டில் சாற்றுகின்றார். ஓர் உயர்ந்த பதவியில் துன்பியல் நாடகக் கதாநாயகன் இருக்க வேண்டும். அவனிடத்தில் பல உயர் குணங்கள் அமைந்திருக்க வேண்டும். அவை அவனிடமுள்ள இழிகுணத்தால் அழிகின்றன என்று காட்ட வேண்டும் என்பதாகத் துன்பியல் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்கின்றனர். ஆனால், மேட்டர்லிங்க் எளிய வாழ்க்கையிலும் துன்பியல் நாடகத்திற்கு இடமுண்டு என்று மொழிகின்றார். ஷேக்ஸ்பியருக்குப் பிறகு, சமுதாயத்தின் பழக்கவழக்கங்களைச் சித்திரிக்கும்