பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

59


வெளியேறி விடுகின்றது. மனத்தின் சுமை குறைகின்றது. இதனை விடுதலைக் கோட்பாடு என்பர். ஆனால், மனத்துக்குக் கிடைத்த ஒரு விடுதலை உணர்ச்சி அல்லது விட்டாற்றியான ஒரு நிலை சிரிப்பினால் மட்டும் ஏற்படுவதில்லை. அழுவதாலும் மனத்தின் பளு குறைந்து விடுதலை பெறமுடியும். எனவே, விடுதலைக் கொள்கை என்பது இன்பியலுக்கு மட்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இனி, வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் விரவியே கிடக்கின்றன என்ற உண்மையைக் கொண்டு விரவல் கோட்பாடு எல்லா நாடகங்களுக்கும் பொருந்தும். இன்பியல் நாடகத்திற்குச் சிறப்புத் தருவதான இன்னொரு கூறு ஆள்மாறாட்டம் ஏற்படுவது, ஒரே மாதிரியாக இருக்கும் இருவரில் ஒருவரை மற்றொருவராக நினைத்துக் கொள்வதால் ஏற்படும் களிப்பு இன்பியல் நாடகத்தில் காணப்படும். வேடிக்கையும் அறிவுடைமையும் நிறைந்த பேச்சு முறைகளால் அமைந்த இன்பியல் நாடகம் நகைச்சுவையுடையதாயினும் மிக நுட்பமானதாகவும் புரிந்து கொள்ளும் முறையில் சிக்கல் மிகுந்ததாகவும் ஆகிவிடக் கூடும். இத்தகைய நாடகங்களில் வாய்விட்டுச் சிரிக்கும் முழக்கம் இல்லாமலிருந்தாலும் உள்ளூர உளம் சிலிர்க்கும் எக்களிப்பு ஏற்படவே செய்யும்.

கிரேக்க இன்பியல் :

மதுவுக்கும் மகிழ்ச்சிக்கும் தேவனாகிய டையனைசஸ் தான் துன்பியல், இன்பியல் ஆகிய இருவகை நாடகங்களுக்கும் தெய்வீக ஆதரவாளன். மழைக்கால விழாக்களில் இன்பியல் நாடகங்களும், இளவேனிற்கால விழாக்களில் துன்பியல் நாடகங்களும் நடைபெற்றன.

கிரேக்க நாடகங்களில் மிகவும் தொன்மைக்கால நாடகங்கள் எவையும் கிடைக்கவில்லை. கிடைக்கின்ற நாடகங்களும் முழுமையாக இல்லை; துன்பியல்