பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

செந்தமிழ் பெட்டகம்


திருந்தன. நாடகத்தினிடத்தில் மக்கள் பேரார்வம் கொண்டபடியால், சமயச் சார்பற்ற நாடகங்களும் தோன்றலாயின.

செஸ்ட்டர் நாடகங்கள் முதலியன நாடகக் கலை தரத்தில் உயர்வு பெறாதன. எனினும், அந்த நாடகங்களில் எதிர்கால வளர்ச்சிக்கான கரு இருந்தது என்பது உண்மை. ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம் நாடக அரங்கிற்குப் புத்தெழுச்சி ஊட்டி மிக முன்னேறச் செய்தது. லத்தீன் மொழியிலிருந்து நாடகங்களைப் பின்பற்றி எழுந்த இத்தாலிய இன்பியல் நாடகங்களும், பிளாட்டஸ், டெரன்ஸ் என்போரின் நாடகங்களும் ஊட்டிய உரம் ஆங்கில நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. விவிலிய நிகழ்ச்சிகளைச் சித்திரித்து மறை பொருள் நாடகங்கள், அறப் பாத்திர நாடகங்கள் ஒரளவு வேடிக்கையாகவும், ஒரளவு ஏளனத்துக்குரியனவாகவும் தோன்றினும் எதிர்கால நாடக வெற்றிக்குப் பாதையைச் செப்பனிட்டுத் தந்தன.

ஆங்கிலத்தில் எழுந்த முதல் இன்பியல் நாடகங்களுள் இன்று கிடைப்பது நிக்கலஸ் யூடல் என்பவர் எழுதிய ராய்ஸ்ட்ர் டாய்ஸ்ட்டர் என்பதுதான். கிட்டத் தட்ட அதே காலத்தில் வில்லியம் ஸ்டிவென்சன் எழுதிய காமர் கர்ட்டனின் ஊசி என்பது குறிப்பிடத் தகுந்த மற்றொரு நாடகமாகும். இந்த இரண்டு நாடகங்களையும் இன்பியல் நாடகங்கள் என்று கூறுவதை விடப் பிரகசனம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனினும் இங்கிலாந்தின் கிராமச் சூழ்நிலை முதன் முதலாக உயிரோவியமாக இந்த நாடகங்களில்தான் தீட்டப் பட்டது என்று குறிப்பிட வேண்டும்.

ஜான் லிலி என்பவர் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளே நாடகத்துக்கு ஏற்றவை என்ற நினைப்பைக் கைவிட்டு பண்டைப் பெளராணிகச் சூழ்நிலை கொண்டு கூட இன்பியல் நாடகங்களை வரையலாம்