பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

65


அருளும் பெருமிதமும் இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை அவருக்குப் பின் மறைந்து விட்டதென்றே கூறுதல் வேண்டும். 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோல்டுஸ்மித் எழுதிய நாடகங்களில் ஷேக்ஸ்பியரின் பெருமிதமான மனிதப் பண்பு நிறைந்த இனிய நகைச்சுவையின் நிழலை ஓரளவு காண முடிகின்றது.

மனப்பாங்கு இன்பியல்

இவ்வகைப்பட்ட நாடகங்களை நாடக உலகில் இடம்பெறச் செய்தவர் பென் ஜான்ஸன் ஆவார். இவர் இயற்கை நவிற்சியில் ஊறியவர். பண்டைக் கிரேக்க ரோமானிய முறையைச் சார்ந்த இன்பியல் நாடக அமைப்பின் காவலர் என்று இவரைக் குறிப்பிடலாம். இவருடைய காலத்துப் பெருவழக்காக இருந்த பாவனை நவிற்சி இன்பியலை எதிர்த்து விளைந்ததே மனப்பாங்கு இன்பியல் என்னும் நாடக அமைப்பு. பாவனை நவிற்சி நாடகங்கள், 'இல்லது புனைதல்’ என்ற தன்மை மிகுதியாகப் படைத்தவை. இவ்வகையான இல்லது புனைதலில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே மனப்பாங்கு நாடகங்களின் வகை தோன்றியது.

ஒவ்வொரு பாத்திரமும் வாழ்க்கையில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட மனப்பாங்கின் பிரதிநிதியாகவே பென் ஜான்ஸனால் படைக்கப்பட்டது. உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் பண்போடு, உள்ளதை மிகுத்துக் கூறும் உயர்வு நவிற்சியும் அவருடைய நாடகங்களில் காணப்படும். இத்துணைச் சிறப்புக்கள் இருந்தும் அவருடைய நாடகங்கள் நாடகச் சுவை குறைந்திருந்தன. நாடக இலக்கண அமைப்பில் கடும்பற்றும், உரையாடல் அமைக்கும் போது ஒழுக்கச் சீர்திருத்தத்தை வற்புறுத்தும் உபதேசப் பாங்கும் அவரிடம் இருந்ததே அதற்குக் காரணம். அவருடைய நாடகங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை அவனவன் மனப்பாங்கில்,

செ. பெ.-11-5