பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

செந்தமிழ் பெட்டகம்


சிக்கல்களும் போராட்டங்களும் இன்றைய நாடகத்தின் சிறப்பியல்பு. அறிவு ஓங்கி வளரும்போது உணர்ச்சி மங்கிவிடுகிறது. உணர்ச்சியைக் கவரும் நாடகங்கள் வெற்றி காணா. அத்தகைய நாடகங்கள் 20 ஆம் நூற்றாண்டில் தலை காட்டுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

மேற்குறித்த வகையில் ஏற்பட்ட மனநிலை மாற்றங்களால் துன்பியல் நாடகங்கள் இனி வளரா என்று கூடச் சில அறிஞர்கள் எண்ணுகின்றார்கள். கால்ஸ் வொர்த்தி, ஜான் மேஸ்பீல்டு போன்ற ஆசிரியர்கள் இக்காலத்திலும் துன்பியல் நாடகங்கள் வரைந்து வெற்றி பெற்ற போதிலும், துன்பியலுக்கு முற் காலத்தில் இருந்த செல்வாக்கம் மோகமும் இந்தக் காலத்தில் ஏற்பட முடியாது என்றே அறிஞர்கள் வற்புறுத்துகிறார்கள்.

நாடகத்தில் இசை

பண்டைய காலத்தில் இசை, நாட்டியம் இவைகளின் சேர்க்கையே நாடகம் என்று வழங்கி வந்தது. ரிக் வேதத்தில் சில தோத்திரப் பாடல்கள் தேவதைகளுக்குள் நடைபெறும் உரையாடல் உருவில் அமைந்துள்ளன. திருவிழாக்களில் இப்பாடல்கள் நாட்டியத்துடன் கலந்து பாடப்பட்டன. காலம் செல்லச் செல்லச் சிறு நிகழ்ச்சிகளைப் பற்றிக் கோவையான இசைப் பாடல்கள் மிக்க மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்ந்து, மக்கள் நாடகங்களில் ஆடல் பாடல்களுடன், நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர். நிகழ்ச்சிகளைச் சேர்த்துக் கொண்டதனால் உண்டான மகிழ்ச்சி நீடித்திருப்பதற்காகப் புராணங்களிலும் இதிகா சங்களிலும் உள்ள கதைகளை நாடகங்களின் பொருளாக அமைத்துக் கொண்டனர்.

நாடகத்தில் வரும் உரையாடல்கள் இசை உருவிலேயே அமைந்திருந்தன. இன்றும் இசை நாடகங்களும், தெருக்கூத்துக்களும் இம்முறையைக் கையாண்டு