பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

77


இடங்களில், ஏற்ற நாடக பாத்திரங்களின் வாயிலாக வெளியிடப்படும். அது விருவிருப்பை இடையறாது கடைசி வரை நிற்கச் செய்யும். கதைப் போக்கிற்குத் தேவையான சில பொருள்களை நடிக்க இயலாதிருக்கும். அவற்றை எடுத்துக் காட்டவும் இத் தனி மொழிகள் பெரிதும் உதவும்

நாடக உரையாடலுக்கு விருவிருப்புத் தருவது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே. வார்த்தைகளைத் தேர்ந்ததெடுத்துச் சிக்கன முறையில் உணர்ச்சியை உணர்த்தும் வகையில் தொகுப்பதே நாடகத்தில் இடையறாச் சுவை இறுதிவரை நிற்கச் செய்யவல்லது. தேவையில்லாத உரையாடலைச் சேர்த்தால், விருவிருப்புத் தடைப்பட்டுச் சீக்கிரத்திலேயே சலிப்பு ஏற்பட்டுவிடும். நாடக பாத்திரங்களின் பேச்சு அவர்களுக்கான தகுதிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ற நடையில் அமைய வேண்டும். இத்தகைய இயற்கைப் பேச்சு முறைகளே நாடக பாத்திரங்களின் பண்புகளையும், உணர்ச்சிப் போக்கையும், சூழ்நிலை விவரங்களையும் நேருக்கு நேரே பார்ப்பது போல நன்கு காட்டக் கூடியவை. நாடகப் போக்கிற்குத் தேவையான சில பொருள்களைப் பேச்சு முறையில் அமைக்க முடியாதிருக்கும். அப்போது அவற்றைத் தகுந்த இடங்களில் மெளனக் காட்சிகளாக அமைப்பர்.

உணர்ச்சி வேகம் சில வேளைகளில் பொங்கி வழிந்திடும் நிலைகள் ஏற்படக்கூடும். அந்நிலைகளில் மட்டும் அவ்வுணர்ச்சிப் பெருக்கை உணர்த்துவதற்கேற்ற இராகங்களில் பாட்டுக்கள் அமைக்கப்படும். நாடகங்களில் பாட்டுக்கள், சிக்கன முறையில் மிகமிக அவசியமான கட்டங்களில் மட்டும் அமைவதே சந்தர்ப்பச் சிறப்பை எடுத்துக் காட்டக் கூடியன. இப்படிச் சித்திரிக்கும் நாடக சந்தர்ப்பங்களே நாடகத்தை உயர்தரக் கலையாகச் செய்வதாகும்.