பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

81


நாடகங்களுக்குப் பரிசுகள் கொடுத்துப் போற்றி வருகிறார்கள். இவ்வோரங்க நாடகமானது அமெரிக்காவிலும், பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளிலும் பரவி, இந்தியாவிலும் சிறப்புற்று வருகிறது.

தமிழ் ஓரங்க நாடகம்

அண்மைக் காலத்தில் தான் ஒரங்க நாடகங்கள் தமிழில் தோன்றியுள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கு வானொலி பெரிதும் துணை புரிந்துள்ளது. ஒலி பரப்புவதற்காகவே பெரும்பாலும் ஒரங்க நாடகங்கள் எழுந்தன. பின்பு பத்திரிகைகளும் இவற்றிற்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன. ஒலி பரப்புவதற்காக எழுதிய ஒரங்க நாடகங்களில் பல இலக்கியத்தில் இடம் பெறும் தகுதி பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இடம்பெறக் கூடியவை புத்தகங்களாக வந்திருக்கின்றன. சிறு கதைகளைப் போலவே நல்ல ஓரங்க நாடகங்களும் எல்லோராலும் விரும்பப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றை மேடையில் நடித்துக் காட்ட இன்னும் பெரிய அளவில் முயற்சி நடைபெறவில்லை. கல்லூரிகளி லும் பள்ளிகளிலும் ஆங்காங்கு முயற்சி நடைபெறுகிறதென்றாலும் நாடக வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்தாபனங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை.

பிற நாடுகளில் நாடகம் : லத்தீன் இத்தாலியில் ரோமானியர் காலத்தில் ரத்தீனே தாய்மொழியாக இருந்தது. அந்த மொழியில் முதன் முதல் நூல் இயற்றியவர் ஆண்டரானிக்ஸ் (கி.மு. 3ஆம் நூ) என்னும் கிரேக்க அடிமையாவர். அவர் ஹோமருடைய ஆடிசி என்பதை மொழி பெயர்த்ததோடு சில கிரேக்க நாடகங்களையும் மொழி பெயர்த்தார். அடுத்ததாக நூல் இயற்றியவர் நேவியஸ் (கி.மு 200) என்ற ரோமானியக் கவிஞர். இவர் கிரேக்க நாடகங்களை மொழி பெயர்த்ததுடன் சிலவற்றைத் தாமாக இயற்றினார்.

செ. பெ.-ll-6