பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

செந்தமிழ் பெட்டகம்


எனியஸ் (கி.மு. 239 கி.மு. 169) என்பவர் ரோமானியக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் கிரேக்கத் துன்பியல், இன்பியல் நாடகங்கள் பலவற்றை மொழி பெயர்த்ததோடு பல நாடகங்களைத் தாமாகச் செய்துமுள்ளார்.

ரோமானிய நகைச்சுவை நாடகாசிரியர்களுள் தலை சிறந்தவர் பிளாட்டஸ் (கி.மு. 254 - கி.மு. 184) என்பவர். இவருடைய நாடகங்களில் இருபது நாடகங்கள் சிறிதும் பழுதுபடாமல் கிடைக்கின்றன, இவர் கதைக் கருவை கிரேக்க நாடகாசிரியர்களிடமிருந்து எடுத்துக் கொண்ட போதிலும், ஷேக்ஸ்பியர், மோலியர் போன்ற பிற்காலத்து மிகச் சிறந்த நாடகாசிரியர்களுக்குக் கதைகளை உதவிய பெருங்கருவூலமாகத் திகழ்கின்றார். இக்காலத்தில் மேனாட்டில் நடிக்கப்படும் நகைச்சுவை நாடகங்களின் பாத்திரங்கள் பெரும்பாலும் பிளாட்டஸ் கிரேக்க இலக்கியங்களிலிருந்து எடுத்து மெருகு தந்தனவேயாம். பிளாட்டஸ் கதையையும் பாத்திரங்களையும் கிரேக்கரிடமிருந்து பெற்ற போதிலும் இவருடைய நடையும் போக்கும் முற்றிலும் ரோமானிய முறையையே தழுவியவை.

இவருக்குப் பின்வந்த நாடகாசிரியரான டெரன்ஸ் என்பவரும் சிறந்தவர். ஆயினும் அவர் தாமாக இயற்றுவது தவறு என்று எண்ணி, கிரேக்க நாடகங்களைப் பின்பற்றியே எழுதினார். இவருடைய நூல்களில் மொழி தவிர வேறு எதுவும் இத்தாலியத் தொடர்புடையதன்று. ஆயினும் இப்போது கிடைக்கும் இவருடைய ஆறு நாடகங்களும் ஐரோப்பியப் புலவர்களுக்கு ஒரு பெரிய முன்மாதிரியாக அமைந்துள்ளன.

இங்கிலாந்தில் தொடக்கத்தில் இருந்த நாடகாசிரியர்ளுக்கு இன்பியல் நாடக விஷயத்தில் பிளாட்டஸும் டெரன்ஸும் முன் மாதிரியாக இருந்தனர். அவர்களுக்குத் துன்பியல் நாடகங்களுக்கு செனிக்கா (கி.மு 4 கிபி 65) என்பவர் முன்மாதிரியாக இருந்தார்.