பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

செந்தமிழ் பெட்டகம்


நாடகம் வரையச் செய்து நடிக்கச் செய்தார். அதன்பின் பல ஜெர்மன் நாடகங்கள் மொழி பெயர்க்கப்பட்டன. முதன்முதல் எழுந்த ரஷ்ய நாடகமாகிய ஊதாரி மகன் என்பதைப் பாலட்ஸ்க்கி என்பவர் இயற்றினார்.

18 ஆம் நூற்றாண்டில் சுமரொக்காவ் (1718-1777) என்பவர் இன்பியல் நாடகங்களும் துன்பியல் நாடகங்களும் தேசியத்தைப் பொருளாக வைத்து எழுதினார். இவரைப் பின்பற்றிப் பலர் வரைந்தனர். அவர்களுள் ஒருவர் இரண்டாம் காதரின் என்னும் பேரரசி. இவர் அரச சபையினருடைய ஆடம்பரங்களையும் கபடங்களையும் கேலி செய்து எழுதினார்.

இதுவரை இலக்கியத்துக்குப் பயன்பட்டது பிரெஞ்சு மொழியே. முதன் முதல் ரஷ்ய மொழியைப் பயன்படுத்தியவர் கரம்ஸீன் (1765-1826) முதன் முதல் ரஷ்ய மொழியில் ரஷ்யப் பொருள் கொண்டு எழுதப்பட்ட துன்பியல் நாடகம் போரிஸ் காடுநாவ் என்பது.இதை எழுதியவர் புகழ் படைத்த புஷ்க்கின் (1799-1826) என்பவர். இவர் காட்சிகளும் பேச்சு நடையும் இயற்கையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இந்த நாடகத்தின் கவிதை மிகச் சிறந்தது என்பர்.

புஷ்க்கின் இறந்த பின் உரைநடை நாடகங்கள் முக்கியமாயின.இதற்குக் காரணமாயிருந்தவர் காகல் (1808-1852) இவர் எழுதிய அரசாங்க இன்ஸ்பெக்டர் இறவாத புகழ் பெற்றது. குர்கெனியேவ் என்பவர் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியராயினும் சில நல்ல நாடகங்களும் வரைந்துள்ளார். அஸ்ட்ராவ்ஸ்க்கீ (1823-1886) என்பவருடைய காடு என்பது சிறந்த இன்பியல் நாடகம்; புயல் என்பது உருக்கமான துன்பியல் நாடகம். இவர் இக்கால இயற்கை நவிற்சி நாடகத்தை நிறுவினவர் என்று கருதப்பெறுகிறார்.

உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்ட்டாய் பல சிறந்த நாடகங்கள் இயற்றினார்.