பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

------

சிந்தனையே வாழ்வு. நம் வாழ்வினும் நம் தாய்மொழியின் வாழ்வு நனி சிறந்தது.

நாளும் என் நெஞ்சில் செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகளே, 'செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்' என்னும் தலைப்பில் ஒன்று திரண்டு நூலுருவம் பெற்றுள்ளன. இந்நூல் முற்ற முடிந்த முழுமை உடையது அன்று; புதிய பாதையில் முதல் முயற்சி; அவ்வளவுதான். செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகளுக்கு என்றும் எவரும் எல்லை கோல இயலாது.

இந்நூல் ஆராய்ச்சிப் பேரறிஞர், மயிலை-சீனி--வேங்கடசாமி அவர்களின் அணிந்துரையால் பெருமை பெற்றுள்ளது. தமிழ்த்தாயின் தவப் புதல்வராய் அப்பெருந்தகையார்க்கு யான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

வழக்கம்போல இந்நூலைச் செப்பம் செய்துதவிய மகாவித்துவான், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளைஅவர்கள் அருளுடைமைக்கு என்றும் நன்றியுடையேன்.

ஒரு எளிய தமிழ்க் குழந்தையின் இனிய மழலைமொழிகள் என்று கருதி, தாய் தந்தையரின் அருள் உள்ளத்தோடு தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றிப் பயன் கொள்ள இறைஞ்சுகிறேன்.


வாழிய செந்தமிழ்!

11–9–'59.

ந.சஞ்சீவி.