பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி உறவுகள் சமய நல்லிணக்கத்திற்கேற்ற சான்றுகளாகத் திகழ்ந்தமையை - இன்றையச் சூழலுக்குப் பொருத்தமான வகையில் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளமை பாராட்டத்தக்கது. ஆசிரியர் வள்ளல் சீதக்காதியின் மற்றொரு பரிமாணத்தை ஐந்தாவது இயலில் எடுத்துக் காட்டியுள்ளார். தலைமலை கண்ட தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காகத்தம்பிரான், திருநெல்வேலி நமச்சிவாயப் புலவர், திருப்புவனம் கந்தசாமிப் புலவர் போன்ற தமிழ்ப்புலவர் பெருமக்களோடு வள்ளல் கொண்டிருந்த தமிழ்த்தொடர்பினை நன்கு விளக்கியுள்ளார். வள்ளலின் மீது பாடப்பெற்ற சீதக்காதி திருமண வாழ்த்துப்பாடல், நொண்டி நாடகம் ஆகியவற்றின் சிறப்புக் கூறுகளை எடுத்தியம்புவதோடு திருமணவாழ்த்து எங்ங்னம் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக முசுலீம்களின் வாழ்வு நெறிகளையும் பழக்க வழக்கங்களையும் புலப்படுத்தும் அரிய கருவூலமாக விளங்குகிறது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். இசுலாத்தின்மீதும் இசுலாமியப் புனிதரிடத்தும் வள்ளல் கொண்டிருந்த பெரு மதிப்பை எடுத்துக் காட்டுகிறது ஆறாவது இயல். இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்கள் மீது வள்ளல் கொண்டிருந்த பெரு மரியாதையை நன்கு விளக்கியுள்ளார். இப்பெருமதிப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குவதே இன்று நாம் காணும் ஜாமிஆ மஸ்ஜித். இமாம் அவர்களின் அறிவுரைப்படி அமைக்கப்பட்டதே இப்பெருஞ் சின்னம். திராவிடஇசுலாமியக் கட்டடக் கலைக்குத் தக்க சான்றாக விளங்குவது இது. ஏழாம் இயல் பெரியதம்பி மரக்காயர் - ஆங்கிலேயர் இடையேயான தொடர்புகளை விளக்குகிறது. அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் கைபோர்டு என்பவருக்குப் பெரியதம்பி மரக்காயர்(வள்ளல் சீதக்காதி) எழுதிய கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு இவை விளக்கப்பட்டுள்ளன. பாரசீக மொழியில் வள்ளல் எழுதிய கடிதம் இது. மேலும் இவ்வியலில் வள்ளலின் புகழும் செல்வாக்கும் எவ்வாறு இலங்கையிலும் பரவியிருந்தன என்பதும் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. டச்சுக்காரர்கள் சீதக்காதி மீது எவ்வாறு பகைமை பாராட்டினர். அதனைச் சேதுபதி மன்னர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பது போன்ற சுவையான வரலாற்றுச் செய்திகள் எட்டாம் இயலில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் இயலில் சீரும் சிறப்புமாகத் திகழ்ந்த பெருவள்ளல் சீதக்காதி மரக்காயரின் மறைவினைப் படிக்காசுப் புலவரின் இரங்கற்பாக் கொண்டு