பக்கம்:செம்மாதுளை .pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 8

நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை தான். ஆனால் நடந்திருக்கிறது. அதற்குச் சான்றாக பட்டமங்கலத்துப் பிள்ளையார்', 'குருதி வழிப்பொட்டல்”, 'கத்தப்பட்டுச் சிலை' முதலியன இன்றும் சாகாத சாட்சிகளாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளை நேரில் சென்று பார்க்குந்தோறும் எங்கிருந்தோ வந்து ஒரு புத்துணர்ச்சி நம்மைத் தட்டியெழுப்பிவிடுகிறது. கண்கள் சிவக்கின்றன; நெஞ்சு கொதிக்கிறது; ஒரே வகுப்பாரிடையே இப்படியா போரிட்டுக் கொள்வது!" என்று. நம்மையும் அறியாமல் சொல்லிவிடத் தோன்றுகிறது.

வாளுக்குவேலி, வைரமுத்தன், ஆதப்பன், கல்யாணி, சுந்தராம்பாள், வடிவாம்பாள்-இவர்கள், கதையைப் படிப்போர் உள்ளங்களில் மறையாத உயிர்ப் படங்களாகி விடுகின்றனர்.

கதாநாயகி கல்யாணி, பவளம் போன்ற தித்திக்கும் முத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் செம்மாதுளை போன்றவள். புறத் தோற்றத்தால் உள்ளெண்ணத்தை விளக்கிக் காட்ட அவளுக்கு ஆற்றவில்லை. வினயம் துளியும் இல்லாதவள். விடிந்தால் கண்ணீர் வடிப்பதே அவளுக்குத் தொழிலாகிவிட்டது. அவள் இன்றும் பாகனேரி மங்கையர்க்கு ஒரு தீபஜோதியாக விளங்குகிறாள். மீளாத் துயரில் சிக்குண்டோர் சாகாப் புகழ்பெற்றுவிடுகிறார்கள். கல்யாணி அதற்கு அத்தாட்சி. வாழ்க அவள் புகழ். அந்தப் புகழ் விளக்கின் கண்ணீர்க் காதையை வரைய எனக்குத் துணை நின்ற எனதருமை நண்பர் பாகனேரி உ.பில்லப்பன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நீங்கள் தொடரலாம்! அதோ சூரியன் மறைந்துவிட்டான்! - சுற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது.

                                 அன்பன்
                            எஸ்.எஸ்.தென்னரசு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/9&oldid=495079" இலிருந்து மீள்விக்கப்பட்டது