பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒளவை துரைசாமி மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது, அழகப்பர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் திகழ்ந்த திருமதி டாக்டர் இராதாதியாகராசன் அம்மையார் இவரிடம் தமிழ்க் கல்வி கற்ற பெருமை வாய்ந்தவர். ஒளவை அவர்களின் செந்தமிழ்ச் சாயலும், சங்கத் தமிழ்ப் புலமைச் சால்பும் அம்மையார் உரைகளில் இன்றும் மிளிர்வதைக் காணலாம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது நிறைவு நாளன்று, பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் புரட்சித் தலைவர் அவர்கள், ஒளவை.துரைசாமி அவர்களுக்கு நிதி வழங்கிச் சிறப்பித்தார்.

தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதல் நாவலர் பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் பதின்மரின் பட்டியலில் செந்தமிழ் நலந்துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளரென்று உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களையும், ‘சிறந்த பேச்சாளர்கள் (1947) என்னும் நூலில் நூலாசிரியர் மாசு.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

தமிழே தம் வாழ்வாகக் கொண்டு அல்லும் பகலும் புலமைப் பணியாற்றிய அருந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் ஒளவை துரைசாமி, 1981-ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் 2-ஆம் நாள், மதுரையில் தமது 78ஆம் அகவையில் இயற்கையெய்தினார். அவர் மறைந்தாலும், தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நாம் நெஞ்சம் நிமிர்ந்து சொல்லலாம். கன்றும் உதவும் கனியென்பது போல நம் துணைவேந்தர் ஒளவை நடராசன் நின்ற சொல்லராக நீடு புகழ் நிலவப் பணியாற்றுவதும் மகிழ்வைத் தருகிறது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று பழந்தமிழ் நூல்கள் பாராட்டுவது போல மேடைதொறும் உரைவேந்தர் மகனார் துணைவேந்தர் என்று ஒளவை நடராசனாரைப் பாராட்டுவது உலகத் தமிழர்கள் அறிந்ததாகும். ★ ★ ★