பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

செம்மொழிப் புதையல்


பதுங்கிப்பதுங்கிப் போகின்றார். அம்மங்கை யருகே செல்கிறார் போலும். அவளோடு ஏதேனும் சொல்லாட விரும்புகின்றனரோ? அற்றன்று; அவள் பேச்சொலியைக் கேட்கும் அளவிலிருக்க வேண்டுமென்று கருதுகின்றார் போலும். இன்றேல், இவர் அப்புதரடியில் அமர மாட்டாரன்றோ? என்ன நடக்கின்றது, காண்போம், நெஞ்சே, நீ ஒன்றும் வேறாக நினையாதே; சால்பு குன்றத் தகுவனவற்றைச் சான்றோர் செய்யார்.

“மையிரோதி, மடநல்லீரே” என்று மொழிந்த அம்மன்னவன் இதனையறிந்தால் என்ன நினைவான்? 'மையிரோதி' என்று அழைத்த அம் மணிமொழி இன்னும் என் செவியகம் நிறைய ஒலிக்கின்றதே! மட நல்லீரே என்ற அவரது மாண்பு என் மனத்தே அவரை உருப்படுத்தி விட்டதே! அவரது வாய்மை காணமாட்டாத என் தாயது தாய்மை என்ன பயனுடையதாம். மேனி மெலிகின்றேன்; வேறொன்றும் நினை வில்லேன். ஏதுக்கு என் தாய் இவ்வாறு அவ்வேலனை வேண்டுகின்றாள்.'

"வினவின் என்னையோ அவனை?" என்றொரு சொல்லெழுகின்றது. மேலே கூறியவாறு தானே பேசிப்புலம்பிய மங்கை சுற்று முற்றும் நோக்குகின்றாள், வாடிய முகம் மலர்கின்றது; பணித்த கண் அருள் வழிகின்றது; விளர்த்தவாய் நாவால் நீர் சுலவப் பெறுகின்றது. திணைப்புனத்தின் உள்ளிருந்த பெண்ணொருத்தி, தினைத்தாளை விலக்கிக் கொண்டு வேங்கையடிக்கு வருகின்றாள். இவள் யார்? பொறுப்போம்; இவர்கள் பேச்சிலிருந்துதான் இவளை இன்னாளென அறிதல் வேண்டும்.

“தோழி, முடிந்து போயிற்றோ? என் தாய் இனி என்ன செய்யப் போகிறாளாம்? உள்ளதன் உண்மையை உள்ளவாறு காணும் அறிவுபெற்றும், மக்கள் அதனைச் செவ்வே பயன் கொள்ள அறியாது அலமரு கின்றனரே!இவர்கட்கு அறிவுச்சுடர் உண்டாகுமோ? அஃது உண்டாகு நாள் என்றோ தெரிய