பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

113


தோழி :- அது தெரியாதா? என்ன சொல்லித் தம் கெடுதி வினவினான்?

மெல்லி :-யான் எய்த அம்புபட்டுப் புண் மிகுந்து பெருந் துயர் கொண்டு யானை யொன்று தன் உயர்ந்த மருப்பு விளங்க இப்புனத் தருகே வந்த துண்டோ? என்றார்.

தோழி :- அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் குதித்து நாற்புறமும் ஓடிவர, அவன் சிறிது நேரம் கழிந்தபின் சென்றானன்றோ?

மெல்லி :-தோழி, அவரது சாந்தணிந்த மார்பும், வில் சுமந்த தோளும், தனித்திருந்த நம்மிடத்தே அவர் சொல்லாடிய தகைமையும் என் நெஞ்சைக் கவர்ந்து கொண்டன. அவர் சொல்லிய சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன. அவர் பொருட்டு நாம் வருந்தும் இவ்வருத்தத்தை அன்னை இன்னும் அறியவில்லையே. இதற்கொரு வழியுமில்லையா?

தோழி :-அதற்குத்தான் தக்க வழிதேடப்படுகிறதே? அதற்குள் நீ ஏன் துயர்கின்றாய்?

மெல்லி :- வேலனைக்கொண்டு வெறி யயர்கின்றனளே அன்னை; இதுவோ வழி.

தோழி :- அதுதான் என்று நம் தாயும் நினைக்கின்றாள். அவ்வேலனும் அவட்குத் தக்கவாறு தான் கூறியுள்ளான்.

மெல்லி:- என்ன அது?

தோழி :- என்னவா? "எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தணி மருந்து அறிவல்" என்று கூறியுள்ளான்.

மெல்லி :- (திடுக்கிட்டு) உண்மையாகவா? வேலனும் இவ்வாறு பொய் கூறுவானா? வேலனது இறைவன் முருகனன்றோ; அவன் நம்மை அணங்கினவன் இல்லையே; பொய்மொழிந்து ஒழுகும் வேலன் பொய்ம்மையை நம் தாய் அறிந்திலளே, இதற்கு என் செய்வது?செ-8