பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாலைவரை இருந்து உரைவேந்தரின் அரிய கட்டுரைகளைத் தாங்கிய பழம் பெரும் இதழ்களைக் கண்ணுறும் பேற்றைப் பெற்றேன். இப்பணி ஒரு திங்களுக்கு மேலாக நாள்தோறும் நடந்தது.

‘தமிழ்ப் பொழில்’, ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச் செல்வி' முதலான இதழ்களைப் புரட்டிப் பார்த்தபோது, உரைவேந்தரின் உரைச் சித்திரங்கள் மிளிரக் கண்டேன். காலப்போக்கில் அவர் எழுதிய மலையளவுக் கட்டுரைகளெல்லாம் எங்குச் சென்று மறைந்தனவோ தெரியவில்லை. ஆனால், அந்த அரிய கருவூலங்கள் சிலவாவது கைக்குக் கிடைத்தனவே என்ற மனநிறைவே அப்போது ஏற்பட்டது. எல்லாவற்றையும் பொறுமையாக, பெருமையாகப் படியெடுத்து அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்து, டாக்டர் ஒளவை நடராசன் அவர்களிடம் அளித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தம் அருமை மகன் டாக்டர் அருளிடம், “தாத்தாவின் கட்டுரைகளைப் பார்த்தாயா, அறிஞர் கிரியின் அயராத முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அந்தக் காட்சி எனக்குப் பெருமிதமாக இருந்தது.

பின்னர், அவற்றையெல்லாம் இலக்கியம்-சமயம் - சமுதாயம் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பகுத்தும் தொகுத்தும் வைத்தோம்.

கால வெள்ளத்தில் கரைசேர்ந்த அந்தக் கட்டுரை மணிகளையெல்லாம் திரட்டி ஒருசேரச் சேர்த்து, நூல் வடிவமாக்கினோம். அந்த அரிய கட்டுரைகளின் ஓர் அழகிய வடிவம்தான் இந்த நூல். உரைவேந்தரின் உரைச் செல்வங்கள் காலக் கல்வெட்டாகும்; அந்தந்தக் காலக் கலை, வாழ்க்கை, நாகரிகம், மொழி, நடை, இலக்கியக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டும் பண்பாட்டுப் பெட்டகம் அது.

உரைவேந்தரின் உரைக்கோவைக்குச் 'செம்மொழிப் புதையல்' என்று பெயரிட்டேன். இதனை விரும்பி ஏற்று வெளியிடும் புகழ் வாய்ந்த மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் நன்றி என்றும் உரியது. தமிழுலகம் இந்நூலை ஏற்றுப்போற்றிப்பயன்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தொகுத்த நிரலும் முயற்சியும் சுட்டிக்காட்டிய வகையில் இத்தொகையுரை அமைகிறது.

★★★

10